தஞ்சாவூரில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம்... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் இன்று டிடிவி தினகரன் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ, டிடிவி தினகரன் இப்போராட்டத்தை தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் இன்று காலை துவங்கினார். பலர் கலந்துக்கொள்ளும் இந்த போராட்டத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த மாதம் 16ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வரும் மார்ச் 20-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதற்கு 9 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் விவாதங்கள் நடைபெற்றது. இதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும் அதிமுக காவிரி விவகாரத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது என்று திமுக குற்றம்சாட்டியது. இதற்குப் பதிலளித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை எனத் திட்டவட்டமாக கூறினார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகக் கடந்த 17ம் தேதி தினகரன் அறிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முக்கிய குறிக்கோள் காவிரி மேலாணை அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவதே ஆகும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று காலை தஞ்சையில் போராட்டத்தை துவக்கி வைத்தார். இவருடன் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தமிழக மக்கள் தங்களின் உரிமையைப் போராடியே பெற வேண்டிய நிலை உள்ளது என்றார். மேலும் இதே போல் காவிரி மேலாண்மை வாரியம் போராடி பெற வேண்டும் என்றும், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்றும் கருத்து தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close