வீட்டுக்கு சென்றவுடன் அவர்கள் தான் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள்: டிடிவி தினகரன் பதிலடி

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் முதலில் வீட்டுக்கு செல்வார்கள், அதன் பின்னர் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள்

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் முதலில் வீட்டுக்கு செல்வார்கள், அதன் பின்னர் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது அவர் கூறும்போது: என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்புவேன் என்று கூறியவர்கள், முதலில் வீட்டுக்கு செல்வார்கள் பின்னர் மாமியார் வீட்டுக்கு செல்வார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உங்களை மாமியார் வீட்டுக்கு அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளாரே?

நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன் தான். அது தெரிந்து தான் 1999-ம் ஆண்டு பெரியகுளத்தில், வேட்பாளராக என்னை நிறுத்தி ஜெயலலிதா ஜெயிக்க வைத்தார். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அந்நிய செலாவணி விதிமீறல் தான் என்மீதான குற்றச்சாட்டாக இருந்ததே தவிர,இவர்களை போல சேகர் ரெட்டியுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. சேகர் ரெட்டி விவகாரத்தில் இவர்கள் மாட்டியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

டிடிவி தினகரனால் தான் எடப்பாடி பழனிசாமி தற்போது இருக்கிறார் என தம்பித்துரை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருக்கு நன்றி. தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்தவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியாக இருப்பார்கள்? இவர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பினால், நேராக மாமியார் வீட்டுக்கு தான் போக முடியம். எனவே, அந்த பயத்தில் தான் அவர்கள் என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கின்றனர்.

முன்னதாக பயம் காரணமாக அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றர் என கூறியிருந்தேன். அந்த பயம் என்பது சேகர் ரெட்டி விவகரம், அன்புநாதன் விவகாரம், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியற்றில் மாட்டிக்கொண்டது தான். எனவே, அவர்கள் தான் மாமியார் வீட்டுக்கு செல்லப்போகின்றனர்.

கமிஷன் வாங்கியோ, புரோக்கர் வேலை செய்தோ, அரசு பணத்தை கையாண்டோ, ஊழல் செய்தோ என் மீது வழக்குகள் கிடையாது. என் மீதான வழக்கு ஃபெரா வழக்கு தானே தவிர, பொதுமக்களிடம் கொள்ளையடித்ததற்காக கிடையாது. நான் அமைச்சராக இருந்ததில்லை, நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்திருக்கிறேன். பின்னர் 2004-ம் ஆண்டு கூட குறைந்த ஓட்டு வித்தியாதத்தில் தான் தோல்வியடைந்தேன் என்பது அண்ணன் அமைதிப்படை பன்னீர் செல்வத்திற்கு தெரிந்தது தான்.

மேடையில் இப்படி பேசியவர்கள் வீட்டுக்கு போகப்போவது உறுதி, வீட்டுக்கு போனபின்னர் அவர்கள் மாமியார் வீட்டுக்குப் போகப்போவது உறுதி. இந்த பயத்தினால் தான் எங்களை வெளியேற்ற வேண்டும் என அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய அமைச்சர்களை ஜெயலிதாவை பார்க்க விடாமல் ஜெயலலிதாவை கொலை செய்தது உங்கள் குடும்பம் என குற்றம்சாட்டியிருக்கிறார்களே?

விசாரணை ஒன்று நடைபெறும்பட்சத்தில் முதலில் சிறைசெல்வது திண்டுக்கல் சீனிவாசன் தான். சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது. சசிகலா வழங்கிய பொறுப்புகளை ஏற்காமல் இருந்திருக்க வேண்டும். தற்போது, இவர்கள் மாட்டிக்கொண்டார்கள், எனவே அவர்களது அமைச்சர் பதவி பறிபோகப்போகிறது. கொலை பலி மட்டுமல்ல நான் தாவூத் இப்ராகிமுடன் இணைந்து குண்டு வைத்தேன் என்று கூறினாலும் கூறுவார்கள். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று  டிடிவி தினகரன் தெரிவித்தார்.

×Close
×Close