ஸ்டெர்லைட் போராட்டம் : தூத்துக்குடி முழுவதும் இன்று கடையடைப்பு: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு!

தூத்துக்குடி போராட்டத்தில் மோதலைக் கட்டுப்படுத்த போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி. இதனைக் கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது வெடித்த கலவரத்தின் மோதலில் 11 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர். இறந்தவர்களில் 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் 99 நாட்களைக் கடந்து நேற்று 100வது நாளை எட்டியது. எனவே 100வது நாள் போராட்டமாக போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் பேரணி நடத்தினர்.

நேற்று நடைபெற்ற இந்தப் பேரணியில் திடீரென போலிசாருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது போராட்டக்காரர்கள் கற்களை எடுத்து வீசினர். மேலும் அருகில் இருந்த வாகனங்கள் சூறையாடப்பட்டது. சிறிது நேரத்தில் தூத்துக்குடி முழுவதும் பதற்றமான சூழல் பரவியது. இந்தச் சூழலை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் தடைகளை தகர்த்தெரிந்து போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

நிலவரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கி சூட்டில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. போலீசாரின் இந்தக் கொடூர செயலைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக வணிகர் சங்கத்தினர், தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு எதிராக கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த செயலைக் கண்டிக்கும் வகையில், இன்று தூத்துக்குடி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பிற்கு வணிகர்கள் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

×Close
×Close