Udhayanidhi stalin latest news: உதயநிதி ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் தான். 1980-களின் தொடக்கத்தில் இருந்து அந்தப் பொறுப்பை வகித்த மு.க.ஸ்டாலின், 2017 ஜனவரியில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தார். சுமார் இரண்டரை ஆண்டுகள் இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சுவாமிநாதன் சில தினங்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்தார்.
மு.க.ஸ்டாலின் மகனும், முரசொலி நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலினை அந்தப் பொறுப்புக்கு கொண்டு வரும்விதமாகவே வெள்ளக்கோவில் சுவாமிநாதன் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் விதமாக உதயநிதியை அந்தப் பொறுப்பில் அமர்த்த திமுக தலைமை முடிவு செய்துவிட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக மாநிலம் முழுக்க திமுக.வுக்கு பிரசாரம் செய்தவர் உதயநிதிதான். நடிகர் என்ற அளவிலும் அவருக்கு பரவலான அறிமுகம் இருக்கிறது. மேடைகளில் சரளமாகவும் எதார்த்தமாகவும் பேசும் தன்மையும் வாய்த்திருக்கிறது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்த உற்சாக தருணத்தில், உதயநிதிக்கும் முக்கிய பொறுப்பை வழங்கி விடுவது என முடிவு செய்யப்பட்டது.
நேற்று அமாவாசை. இன்று அல்லது நாளை வளர்பிறையை கருத்தில் கொண்டு உதயநிதியின் நியமன அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, சென்னையில் உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் இன்று (ஜூலை 4) பிற்பகலில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கூடும்படி அழைப்பு வந்திருக்கிறது.
உதயநிதி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் இனிப்பு வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் கூடுதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளராக நியமித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.