Advertisment

‘முடிவு எடுத்துவிட்டே மேடை ஏறுகிறேன்’ : மாவட்டம் வாரியாக கிளம்புகிறார் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின், திமுக.வினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். ‘முடிவு எடுத்துவிட்டு மேடை ஏறுகிறேன்’ என்றார் அவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

உதயநிதி ஸ்டாலின், திமுக.வினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். ‘முடிவு எடுத்துவிட்டு மேடை ஏறுகிறேன்’ என்றார் அவர்.

Advertisment

உதயநிதி ஸ்டாலின் அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ரஜினி, கமல் அரசியலுக்கு வருகிறார்கள். நானும் அரசியலில் இறங்கும் நேரம் வந்துடுச்சு’ என்றார். இன்னொரு கேள்விக்கு, ‘என் தந்தை அழைத்தால் உடனே வருவேன். ஆனால் அவர் அழைக்க மாட்டார்’ என்றார். ஆனால், ஊர் ஊருக்கு உதயநிதியை வைத்து மேடை போட திமுக நிர்வாகிகள் ஆயத்தமாகிவிட்டார்கள்.

உதயநிதி ஸ்டாலினை வைத்து சென்னை தெற்கு மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறையாவது நிகழ்ச்சி நடத்துவதை மா.சுப்பிரமணியன் வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல இந்த ஆண்டும், ‘உதயநிதி பங்கேற்கும் பொங்கல் விழா’ என்ற பெயரில் ஜனவரி 24-ம் தேதி சென்னை கிண்டியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

உதயநிதியைப் புகழ்ந்து கானா பாடகர்களின் கச்சேரி மேடையில் களை கட்டியது. ‘ஏல இமயமல... எல்லோருக்கும் நல்ல புள்ள... பொங்கல் விழாக் கூட்டத்துல பெருமைப்பட வாராறு... அய்யா உதயநிதியே வருக... நீங்க உள்ளம் மகிழ்ச்சி பெறுக’ என முழங்கிக் கொண்டிருந்தபோதே, உதயநிதி வந்து சேர்ந்தார். மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் முன்னால் நின்று கூட்டத்தை விலக்கி, அவரை மேடைக்கு அழைத்து வந்தார்.

கச்சேரி நிறுத்தப்பட்ட பிறகு, மா.சுப்பிரமணியன் பேச ஆரம்பித்தார்... ‘உதயநிதி, கருவிலேயே அரசியலுக்கு வந்தவர். நிச்சயம் இவருக்கு பின்னால் எல்லாமே அரசியல்தான். தலைவர் கலைஞருக்கு சேப்பாக்கத்துல போய் ஓட்டுக் கேட்டிருக்கிறார். திருவாரூரில் போய் ஓட்டு கேட்டிருக்கிறார்.

தளபதி, எப்பல்லாம் தேர்தலில் ஆயிரம்விளக்கில் நின்றாரோ அப்பல்லாம் ஜீப்பில் பின்னால் உட்கார்ந்து மைக்கை பிடித்துக்கொண்டு தனது மழலைக் குரலில் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்டிருக்கிறார். அரசியலில் எதிரிகளை வீழ்த்திட, ஒரு வெள்ளி வாளை வீர வாளாக அவருக்கு அளிக்கிறேன்’ என்றார் மா.சு.!

உதயநிதி பேசுகையில், ‘அண்ணன் மா.சு. அவர்கள், மேடையை விட்டு இறங்கும் முன்பு ஒரு முடிவை எடுத்துவிட்டு இறங்கவேண்டும் என கூறியிருக்கிறார். நான் மேடையில் ஏறும்போதே ஒரு முடிவு எடுத்துவிட்டுத்தான் ஏறியிருக்கிறேன்.

இந்த மேடையில் ஒரு சிறப்பு உண்டு! ஏன்னா, இது திமுக மேடை! இங்க ஒரே மாதிரி உட்கார்ந்திருப்போம். இன்னைக்கு காலைல ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கு. நீங்க பார்த்திருப்பீங்க. (காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பங்கேற்ற நிகழ்ச்சி) அதுல மேடைல இன்னொரு மேடை! அதுதான் திமுக மேடைக்கும் அந்த மேடைக்கும் உள்ள வித்தியாசம்!

மா.சு. அவர்கள் தலைவர் கலைஞரை எனது தந்தை முதல் முறையாக சிறைச்சாலையில் சந்தித்ததாக சொன்னார். நானும் முதல் முறையாக எனது தந்தையை சிறைச்சாலையில்தான் சந்தித்தேன். அவர் ஒன்றை மறந்துவிட்டார், நான் தலைவர் கலைஞரையும் முதல் முறையாக சிறைச்சாலையில்தான் சந்தித்தேன்.

நான் இங்கு ஒரு நடிகனாக வரவில்லை. பெருமையோடு சொல்வதானால், கலைஞரின் பேரனாக வந்திருக்கிறேன். தளபதியின் மகனாக வந்திருக்கிறேன். அதைவிட பெருமையாக சொல்வதானால், திமுக.வின் தொண்டனாக வந்திருக்கிறேன்.

என்னுடைய நிமிர் படத்திற்கு இலவசமா விளம்பரம் கொடுத்ததற்கும் அண்ணன் மா.சு. அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இங்கு பத்திரிகை நிருபர்கள் வந்திருக்கிறார்கள். அவங்க எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாங்க. ‘நீங்க அரசியலுக்கு வந்துட்டீங்களா?’ எப்ப பேட்டிக் கொடுத்தாலும் கடைசியா இந்தக் கேள்வி வச்சிருப்பாங்க!

நான் சொன்னேன், ‘நான் பிறந்ததுல இருந்து திமுக.வுலதான் இருந்தேன். என் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம், சுயமரியாதை ரத்தம்ங்கனு சொன்னேன். உடனே அடுத்த கேள்வி, ‘அடுத்த தேர்தல்ல எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா, ஆயிரம்விளக்குல நிக்கப் போறீங்களா?’னு கேட்டாங்க.

என்னுடைய அரசியல், தேர்தலை நோக்கிய அரசியல் மட்டுமல்ல. திமுக தொண்டர்களுடன் ஒன்றாக நின்று பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன். அமைச்சர் அண்ணன் ஜெயகுமாரிடம் போய் கேட்டிருக்காங்க... இந்த மாதிரி உதயநிதி வந்துட்டாராமேன்னு! அதற்கு அண்ணன் ஜெயகுமார், ‘நாங்க எத்தனையோ நிதியை பார்த்துட்டோம். இந்த நிதி பெரிய விஷயமா?’ன்னு சொல்லியிருக்கார்.

அண்ணே, ஏழு லட்சம் ரூபாய் பற்றாக்குறையில் உங்க நிதி ஓடிக்கிட்டிருக்குண்ணே! நீங்க முதல்ல அந்த நிதியை கவனியுங்க. இந்த நிதி, நான் இங்கதான் இருப்பேன். எப்ப வேணும்னாலும் நாம பேசிக்கலாம்.’ என உதயநிதி பேசினார். கையில் குறிப்பு வைத்துக்கொள்ளாமல், அமைச்சர் ஜெயகுமாருக்கு கிண்டல் தொனியில் அவர் கொடுத்த பதிலை கட்சிக்காரர்கள் கைத்தட்டி ரசித்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்கு திமுக.வினர் சார்பில் நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார். தென் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி இதுபோல நடப்பது வாடிக்கைதான் என்றாலும், இனி தொடர்ந்து மாவட்டம் தோறும் உதயநிதியை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவுகள் வந்தபடி இருக்கிறதாம்!

அடுத்தடுத்து அவர் பங்கேற்கும் கூட்டங்கள் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே மா.சு.வைப் போலவே ஸ்டாலினுக்கு நெருக்கமான மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அடுத்தடுத்த கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு ஆகியோர் உதயநிதியின் கூட்டத்திற்கு தேதி வாங்கியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உதயநிதியின் கூட்டங்கள் இருக்கும் என கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

உதயநிதியின் வருகை ஆரம்பித்த தருணத்திலேயே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘வாரிசு அரசியல்’ என்கிற விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘இப்போதைக்கு முக்கியப் பதவி எதுவும் உதயநிதிக்கு வழங்கப்படாது. எனவே வாரிசு அரசியல் என்கிற விமர்சனம் எடுபடாது’ என்கிறார்கள்.

 

Dmk Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment