பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
உலகப் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.
ஆட்டத்தின்போது, முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இவர் விக்கெட்டை இழந்து திரும்பிச் சென்றபோது, ரசிகர்கள் சிலர் , அவரை நோக்கி ’ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டது.
இந்நிலையில், முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோவை பகிர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:
“விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறை ஏற்க முடியாது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருகிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“