உடுமலை சங்கர் படுகொலை வழக்கு: விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி!

கவுசல்யாவின் தாய் உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தாய் உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய காவல் துறைக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இதனால், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி , ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம். மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை , கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து மரண தண்டனையை உறுதி செய்ய இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் , சதீஷ் குமார் அமர்வு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உடுமலை டிஎஸ்பிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close