கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் - உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2018 -ல் துவங்கப்பட்ட பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்து தற்போது நிறைவடைந்து கடந்த வாரம் பொதுமக்கள் பயன்பட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய மேம்பாலத்தில் பொள்ளாச்சிக்கு செல்லக்கூடிய பெயர் பலகையில் 40 கி.மீ என்றும், பாலத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் 38 கி.மீ என 2 கி.மீ குறைவாகவும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்துள்ளனர்.
ஆனால் அதே பெயர் பலகையில் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் பாதை குறித்து பொருத்தப்பட்டுள்ள பெயர் பலகை அடையாளத்தில் மாற்றமில்லாமல் மேம்பாலத்திற்கு மேலும் கீழுள்ள சாலையிலும் ஒரே மாதிரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“