அரசு இணைய தளத்திலிருந்து முகவரி நீக்கம் : நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண், முகவரி, மின் அஞ்சல் முகவரிகளை நீக்கியதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்...

தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண், முகவரி, மின் அஞ்சல் முகவரிகளை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து வருகிறார். அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் புகார்களை அரசு இணைய தளத்தில் உள்ள முகவரிக்கு அனுப்புமாறு ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் திடீரென கடந்த மாதம் 21ம் தேதி நீக்கப்பட்டன.

இதை எதிர்த்து மதுரை மத்திய தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து தகவல் வழங்கும் ஆதாரமாக அரசு இணைய தளம் விளங்குகிறது. ஆனால் எந்த காரணமும் தெரிவிக்காமல் அதில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அலுவலக முகவரி உள்ளிட்ட விவரங்களை நீக்கியது சட்டவிரோதமானது. மேலும் பொறுப்பான அதிகாரி, இச்செயலை செய்திருக்க மாட்டார். இந்த செயல் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், வெளிப்படை தன்மைக்கும் எதிரானது. நீக்கிய சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும். அந்த விவரங்களை மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக நீக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளதா என அரசிடம் கேட்டு பதில் அளிக்க கோரினார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த விவகாரம் குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்டு அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close