Advertisment

கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த விவகாரம்: 3 பேர் கைது!

இசக்கிமுத்துவிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக காசிதர்மத்தைச் சேர்ந்த தளவாய்ராஜ், அவருடைய மனைவி முத்துலட்சுமி, தளவாய்ராஜின் தந்தை காளி ஆகியோர் கைது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tirunelveli Collectorate, Family suicide

Tirunelveli Collectorate, Family suicide

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா(2). இசக்கிமுத்து நேற்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தார்.

Advertisment

திடீரென இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் தான் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் தான் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சியை உரசி தனது மனைவி மற்றும் குழந்தைகளின் மீது தீயை பற்ற வைத்து விட்டு தனது உடலின் மீதும் தீயை வைத்து கொண்டார். இதனால் அனைவரின் உடலிலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேதனை தாங்காமல் கணவன், மனைவியும் 2 குழந்தைகளும் அலறி துடித்தனர்.

4 பேர் மீதும் மண்ணை அள்ளி வீசி தீயை அணைக்கும் முயற்சியில் அங்கு இருந்தவர்கள் ஈடுபட்டனர். ஒரு குழந்தையின் மீது தண்ணீரையும் ஊற்றினார்கள். நீண்ட போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி குழந்தை மதி ஆருண்யா மாலை 3.50 மணிக்கும், சுப்புலட்சுமி 4 மணிக்கும், குழந்தை அக்‌ஷயா என்கிற பரணிகா 5 மணிக்கும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.இசக்கிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து அவரது தம்பி கோபியிடம் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி விசாரணை நடத்தினார்.

அப்போது, கந்து வட்டி கொடுமையால் தனது அண்ணன் குடும்பத்துடன் தீக்குளித்ததாக கோபி தெரிவித்தார். தங்கள் ஊரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தனது அண்ணன் இசக்கிமுத்து 2 ஆண்டுகளுக்கு முன் கந்து வட்டிக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அவர் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் திருப்பி செலுத்தியுள்ள போதிலும், பணம் கொடுத்தவர் தரப்பில் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் அப்போது கோபி கூறினார்.

இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏற்கனவே 5 முறை மனு கொடுத்து இருப்பதாகவும் இப்போது 6–வது முறையாக மனு கொடுப்பதற்காக வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்துக்கு தனது அண்ணன் இசக்கிமுத்து கையில் மண்ணெண்ணெய் கேனையும் எடுத்து வந்ததால், ஏதேனும் விபரீத முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காக தான் உடன் வந்ததாகவும், என்றாலும் சம்பவம் நடந்த போது தான் அந்த இடத்தில் இல்லாததால் அவர் குடும்பத்துடன் தீக்குளித்ததை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் கூறி கோபி கதறி அழுதார்.

இதனிடையே கோபி கொடுத்த புகாரின் பேரில், இசக்கிமுத்துவிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக காசிதர்மத்தைச் சேர்ந்த தளவாய்ராஜ், அவருடைய மனைவி முத்துலட்சுமி, தளவாய்ராஜின் தந்தை காளி ஆகியோரை பாளையங்கோட்டை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

 

Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment