சரவண சுரேஷ் வலியுறுத்திய கோரிக்கைக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துவேன் : வைகோ பேச்சு

சரவண சுரேஷ் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அதற்காக எனது போராட்டத்தினை தீவிரப்படுத்துவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சரவண சுரேஷ் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அதற்காக எனது போராட்டத்தினை தீவிரப்படுத்துவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜம் என்பவரது மகன் சரவண சுரேஷ் (51). இவர், கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர்! விருதுநகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

சரவண சுரேஷ், ஏப்ரல் 13-ம் தேதி அதிகாலையில் தீடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். சுமார் 90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்துடன் மோசமான நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில், சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சரவண சுரேஷ் உடல் சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டது. மதிமுக பொது செயலாளர் வைகோ ஆம்புலன்ஸ் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர். மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், விநாயகா ரமேஷ், இ.கம்யூ. அழகுமுத்துப்பாண்டியன், காங். வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர்கள் நிஜாம், ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான கீதாஜீவன், திமுக முன்னாள் எம்.பி. தங்கவேலு, மற்றும் மதிமுக சிப்பிபாறை ரவிச்சந்திரன், ஈரோடு கணேசமூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சரவண சுரேஷ் உடல் பின்னர் தகனம் செய்யப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. கோவில்பட்டி ஜெபராஜ், விளாத்திகுளம் தர்மலிங்கம் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

வைகோ பேசியதாவது : ‘நியூட்ரினோ திட்டத்தினை எதிர்த்து சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சரவண சுரேஷ் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்கள் தான் தீக்குளிக்கின்றனர், தலைவர்கள் தீக்குளிப்பதில்லை என்று செய்திதாள்களில் கிண்டலாக விமர்சனம் வருவது உண்டு. இன்று எனது வீட்டில் ஒருவர் தீக்குளித்து உயிர் துறந்துள்ளர்.

சரவண சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயிர் துறந்துள்ளார். மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவஹிருல்லா, முத்தரசன், வைரமுத்து ஆகியோர் மிகவும் வருத்தப்பட்டு ஆறுதல் கூறினர். எனக்கு அறிமுகம் இல்லாத நடிகர் சிம்பு தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து, ஆறுதல் கூறினார்.

சரவண சுரேஷ் எதற்காக தன் உயிரை இழந்தாரோ, அதற்காக எனது போராட்டத்தினை தீவிரப்படுத்துவேன்’. இவ்வாறு வைகோ கூறினார்.

 

×Close
×Close