இது ஒரு பாசிச அரசு: முதல்வருக்கு வைகோ கடும் எச்சரிக்கை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு பாசிச அரசாக செயல்படுகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு பாசிச அரசாக செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இப்போக்கை கைவிட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் நான்கு பேரின் மீது கடந்த மே 28-ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து திருமுருகன் காந்தி உள்பட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை மதிமுக பொதுச் செயலளார் வைகோ நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு பாசிச அரசாக செயல்படுகிறது என கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடற்கரை மணலில் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மே 17 இயக்கம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நானும் இதில் கலந்து கொள்வேன். ஆனால், இந்த ஆண்டு அஞ்சலி செலுத்த சென்றவர்களை தமிழக அரசு கைது செய்து தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களை சிறையில் அடைத்தது கொடுமையான செயல். அவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியது அதை விட கொடுமையான செயல். ஜனநாயக விரோதமான அடக்குமுறை சட்டங்களை ஏவி கருத்துச் சுதந்திரத்தை பறிக்க இந்த அரசு முயற்சி செய்கிறது.

கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நபர்கள் மீது குண்டர் சட்டம் ஏவுவது கொடிய அடக்கு முறை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் மீதான வழக்கு வருகிற 30-ம் தேதி வரவுள்ளது. அதில், அவர்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

அதேபோல், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக போராடி துண்டு பிரசுரம் கொடுத்த வளர்மதி என்ற கல்லூரி பெண் மீது குண்டர் சட்டத்தை இந்த அரசு ஏவியுள்ளது. இது ஒரு பாசிச நடவடிக்கை. மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசின் இந்த போக்கு, மக்கள் மன்றத்தில், குறிப்பாக; இளைஞர்கள் உள்ளத்தில் அரசு மீது எதிர்ப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போக்கை அரசு கைவிட வில்லையெனில், இந்த அரசு பாசிச அரசாக செயல்படுகிறது என மக்கள் மன்றத்தில் தொடர்ந்து குற்றச் சாட்டுகளை முன் வைப்பேன் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

×Close
×Close