கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற புகழ்பெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ஓராண்டு விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம், இந்த போராட்டம் 1924 மார்ச் 30-ம் தேதி கேரள தலைவர் டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டது.
அப்போது கேரளத் தலைவர்கள் அழைப்பின்பேரில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியார், வைக்கம் சென்று, அந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்றார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. ‘
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரையில் வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வெற்றி கண்ட பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில், ‘வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா’ நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30-ம் தேதி நூற்றாண்டு விழாவை தொடங்கி ஓராண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.
வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராய் விஜயனோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன். வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
மேலும் தமிழக ஆய்வாளர் பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படும், நவ.29-ம் தேதி தமிழக, கேரள முதல்வர்கள் மற்றும் பலர் பங்கேற்கும் சிறப்பான நிகழ்ச்சி தமிழக அரசால் நடத்தப்படும்.
பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ செப்.17-ம் தேதி சமூக நீதி தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்ச்சிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டார்.
இதை அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, கொமதேக, தவாக என அனைத்து கட்சிகளும் வரவேற்றன
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“