Advertisment

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு: எம்.பி.சி-யில் மற்ற சமூகத்தினர் எதிர்த்து வழக்கு தொடர முடிவு

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) தொகுப்பில் உள்ள மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
vanniyar reservation, vanniyar internal reservation 10.5 percent, mbc வன்னியர் உள் ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எம்பிசியில் மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு, opposed other castes in mbc category, tamil nadu

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) தொகுப்பில் உள்ள மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ்நாட்டில் அரசு கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்று அறிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி இருவரும் டாக்டர் ராமதாஸுடன் நடத்தி பேச்சுவார்த்தையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க முன்வந்ததையடுத்து உடன்பாடு எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டை 3 ஆக பிரித்து வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கிடும் சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடும் எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த சில மணிநேரங்களிலேயே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய சுனில் அரோரா அறிவித்தார்.

தேர்தல் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால் இது தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 103 சாதிகளுக்கு மொத்தம் 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் உள் ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடும் எஞ்சியுள்ளவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடும் வழங்கியதற்கு எம்.பி.சி பிரிவில் உள்ள 93 சமூகத்தினர் கடும் எதிபு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் எம்.பி.சி இடஒதுக்கீட்டில் பெரும்பகுதியை உள் ஒதுக்கீடாக அளித்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறுகின்றனர்.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஊடகங்களிடம் கூறியதாவது: “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், அது கொடுக்கப்பட்டிருக்கிற விதம்கொடுக்கப்பட்டிருக்கிற நேரம் மக்களிடையே சரியான விதத்தில் செல்லவில்லை. தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக கடைசி நேரத்தில் தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. இது நிர்பந்தத்தின்பேரில் செய்தது போலத் தோன்றுகிறது. தமிழக அரசு இது குறித்து மற்ற சமுதாயத்தினரையும் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும்.

பாமக போராட்டம் செய்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையத்தை நியமித்தார்கள். அப்போது, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார். அந்த ஆணையத்தின் கருத்துகளைக் கேட்காமல், காத்திருக்காமல் திடீரென அறிவித்திருப்பது ஒரு சரியான ஜனநாயக முறையாக தெரியவில்லை. அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எல்லோருடைய நிலைப்பாடாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையத்தை அமைத்தபோது எல்லோரும் வரவேற்றோம். அது சரியாக நடைபெற்றால், இன்று திடீரென தேர்தலுக்காக இந்த நிலைப்பாட்டை எடுத்தது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை. இதனால், தேர்தலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்படுகிற மற்ற சமுதாயத்தினர் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வன்னியர்களைப் பொறுத்தவரை இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி தேர்தலுக்காக அவசரமாக தற்காலிக ஏற்பாட்டை செய்திருப்பதை அவர்களும் விரும்புவதாகத் தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் தமிழக அரசு பொறுமையாக ஆராய்ந்து முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.” என்று கூறினார்.

அதே போல, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் ஊடகங்களிடம் கூறுகையில், “மக்கள் தொகை அடிப்படையில்தான் இடஒதுக்கீட்டு பங்கீடு இருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடு. இதில் கிட்டத்தட்ட 40 முதல் 50 சதவீதம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

1931க்கு பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முதல்வர் பழனிசாமியையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியிடமும் மனு கொடுத்தோம். இது தொடர்பாக நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

அதிமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்பதற்காக சமரசம் செய்துகொண்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. முறைப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் பிரிக்கவே கூடாது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதை அனுமதித்ததாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். இதனால், தென் மாவட்ட ஓட்டுகள் குறிப்பாக திருசியிலிருந்து அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் அதிகரிக்கும். இந்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லவும் முடிவு செய்துள்ளோம். அதிமுக அரசு இந்த மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராகி விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vanniyar Vanniyar Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment