வசந்தகுமார் வளர்ந்த கதை: இளைஞர்களின் உந்து சக்தியாக வெளிப்பட்டவர்

வணிகம், அரசியல் என இரு துறைகளிலும் தனது உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் எண்ணற்ற இளைஞர்களின் ஊக்கத்திற்கான முன்னோடி.

By: August 29, 2020, 8:00:17 AM

Vasanthakumar death news: தொழில் அதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெச்.வசந்தகுமார் மரணம் அடைந்தார். கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் அவர்! இளைஞர்களுக்கு உழைப்பின் மேன்மையை உணர்த்தும் உந்து சக்தியாக இருந்தார் என்றால் மிகையில்லை.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் என்கிற ஊர்தான், வசந்தகுமாரின் சொந்த ஊர்! இவரது தந்தை அரிகிருஷ்ணன் நாடார், சுதந்திரப் போராட்டத் தியாகி. அரிகிருஷ்ணன் – தங்கம்மை தம்பதியின் மூத்த மகன் குமரி அனந்தன், நாடறிந்த காங்கிரஸ் தலைவர். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றினார் குமரி அனந்தன்.

குமரி அனந்தனின் இளைய சகோதரர்தான், வசந்தகுமார். குமரி அனந்தனின் மகள் டாக்டர் தமிழிசை, தற்போது தெலங்கானா ஆளுனராக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே! இளமைக் காலம் முதல் காங்கிரஸ் கட்சியில் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் குமரி அனந்தன். இலக்கியச் செல்வர் என புகழப்படுபவர். ஆரம்ப நாட்களில் குமரி அனந்தன் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போது அவரை சைக்கிளில் அழைத்துச் செல்லும் பணியை வசந்தகுமார் செய்தார். எனவே காங்கிரஸ் உணர்வு இயல்பாகவே இவருக்குள் பாய்ந்தது.

எனினும் தனது சகோதரர் வழியில் சிறு வயதிலேயே முழுமையான அரசியலில் இறங்காமல், தொழில் ரீதியாக தன்னை வலிமைப்படுத்த விரும்பினார் வசந்தகுமார். அந்தக் காலகட்டத்திலேயே தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களான விஜிபி குழுமத்தினர் சென்னையில் தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியிருந்தனர். வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பது அவர்களது தொழிலாக இருந்தது. அப்படி தவணை முறைப் பொருட்களை வீடுகளுக்கு சைக்கிளில் கொண்டு சென்று சப்ளை செய்யும் ஒரு ஊழியராக விஜிபி குழுமத்தில் பணியில் சேர்ந்தார் வசந்தகுமார். 70-களின் தொடக்கத்தில் இருந்து 8 ஆண்டுகள் இந்தப் பணியை செய்தார் அவர்.

இந்தப் பணியில் பெரும் பணத்தை அவர் ஈட்டவில்லையென்றாலும், பெரிய அளவில் வாடிக்கையாளர்களுடன் வசந்தகுமாருக்கு தொடர்பு கிடைத்தது. இயல்பாகவே யாருடனும் கலகலப்பாக உரையாடும் அவரது தன்மையே அதற்கு முக்கியக் காரணம். இந்த வாடிக்கையாளர் தொடர்பை வைத்துக்கொண்டு, தனியாக தொழில் செய்ய தயாரானார் வசந்தகுமார்.

அப்போது இவரது வாடிக்கையாளரான பலசரக்குக் கடை உரிமையாளர் ஒருவருக்கு பணச் சிக்கல். இவரிடம் தனது கடையை குத்தகைக்கு கொடுத்து, 6 மாதங்களில் 8 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்பது நிபந்தனை. அப்போது வசந்தகுமார் கையில் இருந்தது வெறும் 22 ரூபாய்தான் என ஒரு பேட்டியில் முன்பு குறிப்பிட்டிருக்கிறார்.

அதை வைத்துக்கொண்டு வியாபாரத்தை தொடங்கியவர், பலசரக்குக் கடையை வீட்டு உபயோகப் பொருள் கடையாக மாற்றினார். ஏற்கனவே இருந்த வாடிக்கையாளர் தொடர்பு அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது. விஜிபி குழுமம் பாணியிலேயே தவணை முறையில் பொருட்களை விற்றார். அதாவது பொருளுக்கான பாதி விலையை முதலில் வாங்கிக் கொண்டு, மீதி பணத்தை 6 தவணைகளாக வாங்கும் நடைமுறையை கடைபிடித்தார்.

இந்த வணிகத்தில் இவர் கடைபிடித்த நம்பிக்கை, நாணயம் இவரை வெற்றிப் படிகட்டுகளில் ஏறவைத்தது. அப்படி உருவானதுதான் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் இன்று 64 கிளைகளை விரித்துப் பரவியிருக்கும் வசந்த் அன் கோ. வெறும் 22 ரூபாய் மூலதனத்தில் ஆரம்பித்த வசந்த் அன் கோவின் இன்றைய மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே குமரி அனந்தன், காமராஜருக்குப் பிறகு நாகர்கோவில் எம்.பி ஆகும் வாய்ப்பைப் பெற்றார். 5 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இந்த காலகட்டங்களில் எல்லாம் காங்கிரஸ் அனுதாபியாகவே தொடர்ந்தார் வசந்தகுமார். சரியாக வயோதிகம் காரணமாக குமரி அனந்தன் சற்றே அயர்ந்த காலகட்டமான, 2000-க்குப் பிறகு அரசியலில் வசந்தகுமார் வேகம் காட்டினார். 2008-ல் வசந்த் டிவி-யை ஆரம்பித்து, முழுக்க காங்கிரஸின் பிரசார சாதனமாக்கினார். இதன் மூலமாக காங்கிரஸ் தலைவர் சோனியா அன்பைப் பெற்றார். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொறுப்பையும் பெற்றார்.

2009-ல் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தீவிர முயற்சியில் இருந்தார் வசந்தகுமார். இதற்கான இரு ஆண்டுகளுக்கு முன்பே அந்தத் தொகுதியில் தனது சொந்தச் செலவில் பல்வேறு நலப் பணிகளை செய்து கொண்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அப்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் திமுக அந்தத் தொகுதியை எடுத்துக் கொண்டது.

2011-ல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். மீண்டும் 2014 தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சீட் பெற்று களம் கண்டார். இந்தத் தேர்தலில் திமுக.வும் காங்கிரஸும் தனித்தனியாக நின்றதால், பாஜக வென்றது.

மீண்டும் 2016-ல் நாங்குனேரி சட்டமன்றத் தேர்தலில் நின்று ஜெயித்த வசந்தகுமார், 2019-ல் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரும்பவும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நின்றார். கன்னியாகுமரி தொகுதியில் எம்.பி ஆவதே அவரது லட்சியம் என்பதை தொடர்ந்து உணர்த்தி வந்தார். காங்கிரஸ் மேலிடமும் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியது.

அவர் எதிர்பார்த்தபடி 2019 தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து பெரும் வெற்றி பெற்றார். ஒருவேளை 2009-ல் காங்கிரஸுக்கு நாகர்கோவில் ஒதுக்கப்பட்டிருந்தால், அப்போதே அவர் ஜெயித்து மத்திய அமைச்சராகவும் ஆகியிருக்கக்கூடும். அதேசமயம் 2019-ல் அவர் ஜெயித்தபோது, டெல்லியில் காங்கிரஸ் அரசு அமையவில்லை.

தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவிக்கும் தொடர்ந்து முயற்சித்து வந்தார் வசந்தகுமார். கடைசியாக கட்சியில் மாநிலப் பொறுப்புகள் மாற்றப்பட்டபோது, வசந்தகுமார் உள்பட நால்வர் கட்சியில் செயல் தலைவர்கள் ஆனார்கள். தேர்தல் அரசியல், கட்சி அரசியலில் தீவிரமாக இருந்தாலும், யாரையும் பகைத்துக் கொள்கிறவர் அல்ல வசந்தகுமார். சிரித்த முகமும், அவரது உற்சாகப் பேச்சும் எதிர்க்கட்சியினரையும் வசியப்படுத்தும். சொந்தக் கட்சியிலும் கடைசி வரை கோஷ்டி அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவராக அடையாளம் காணப்பட்டார் வசந்தகுமார்.

70 வயதான வசந்தகுமார், உற்சாக செயல்பாட்டுக்கு பெயர் பெற்றவர். தன்னை இளைஞராகவே எப்போதும் வெளிப்படுத்துவார். வணிக உலகில் நடிகைகளை வைத்து விளம்பரம் செய்த நிலையை மாற்றி, தன்னையே விளம்பர மாடலாக முன்னிறுத்தி பிசினஸை பெருக்கிய முதல் நபர் வசந்தகுமார்தான். அது இன்று கல்யாண் ஜூவல்லர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் என தொடர்கிறது.

வசந்தகுமாரின் மறைவு அவரது மூத்த சகோதரர் குமரி அனந்தன், மாற்றுக் கட்சியில் இருந்தாலும் தமிழிசை ஆகியோரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பிரதமர் மோடி முதல் அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்தமான தலைவர் வசந்தகுமார். இவரின் வெள்ளந்தியான பேச்சும், சோதனையான காலகட்டங்களில் கட்சிக்காக தனது சொந்தப் பணத்தை பெரிய அளவில் செலவு செய்ததும் அதற்கான காரணங்கள்.

வணிகம், அரசியல் என இரு துறைகளிலும் தனது உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் எண்ணற்ற இளைஞர்களின் ஊக்கத்திற்கான முன்னோடி. அதனாலேயே அவருடன் அறிமுகம் ஆகாதவர்களும்கூட அவரது மரணத்திற்காக துயர் கொள்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vasanthakumar death news h vasanthakumar kanyakumari congress mp expired

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X