திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கி வேதம் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (14), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று குளிக்கச் சென்றனர்.
பின்னர் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சுழலில் சிக்கிய அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தடுமாறி தப்பி கரைக்கு ஓடி வந்தான்.
பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். உடனடியாக வேத பாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் விரைந்து வந்து கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர்.
அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
தற்போது கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது.
இதனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் குளிக்க சென்ற 4 பேரும் நிலைகொள்ள முடியாமல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவத்தில் ஒரு மாணவன் உயிருடனும், ஒரு மாணவன் பிரேதமாகவும் மீட்கப்பட்ட நிலையில் இருவரின் நிலைமை என்ன ஆனது என அச்சத்தில் அப்பகுதியினர் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார் மாணவர்கள் கிடைக்கும் வரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக பாடசாலை நடத்தி வரும் பத்ரி பட்டரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“