துணை ஜனாதிபதி தேர்தல் : சசிகலா ஒப்புதல் கேட்பாரா தம்பிதுரை?

மழுப்பலாக பதில் கூறிவிட்டு சென்றார் தம்பிதுரை. எனவே மீண்டும் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு!

துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக சசிகலாவை சந்தித்து தம்பிதுரை ஒப்புதல் பெறுவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆகஸ்ட் 5-ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார். பா.ஜ.க.வும் வேட்பாளரை நிறுத்த இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்த அ.தி.மு.க.வின் இரு அணிகளும் துணை ஜனாதிபதி தேர்தலிலும் போட்டி போட்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் அம்மா அணியின் ஆதரவை கொடுக்கும் முன்பு மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சசிகலாவின் ஒப்புதலை பெற்றார். இப்போது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சசிகலா சிக்கலை எதிர்கொண்டு வரும் சூழலில், துணை ஜனாதிபதி தேர்தலில் முடிவெடுக்கும் முன்பும் அதேபோல தம்பிதுரை பெங்களூரு செல்வாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஜூலை 14) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தம்பிதுரை, ‘துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், தலைமைக் கழகமும் முடிவு செய்வார்கள்’ என்றார். ‘சசிகலாவிடம் ஒப்புதல் பெறுவீர்களா?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘தலைமைக் கழகம் முடிவெடுக்கும் என கூறிவிட்டேன்’ என மழுப்பலாக பதில் கூறிவிட்டு சென்றார் தம்பிதுரை. எனவே மீண்டும் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சசிகலாவின் ஆலோசனைப்படி ஆதரிப்பதாக டி.டி.வி.தினகரன் தனியாக அறிக்கை விட்டார். அதேபோல துணை ஜனாதிபதி தேர்தலிலும் டி.டி.வி.தினகரன் தனி அறிக்கை விட வாய்ப்பிருக்கிறது.
‘காங்கிரஸ் வேட்பாளரை தி.மு.க. ஆதரிப்பதால், பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’என தங்களின் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாடை நியாயப்படுத்தி பேசுகிறார்கள், அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள்.

×Close
×Close