ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசுவாரே தவிர அரசியலுக்கு வரமாட்டார்: விஜயகாந்த்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

அதைப்பற்றி, நான் எதுவும் நினைக்கவில்லை. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே எங்களது எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். தற்போது தேமுதிக-வில் நல்ல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என நல்ல நிலையில் இருந்து வருகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்து கவலையில்லை. எனென்றால், தேமுதிக-வில் ஏராளமானோர் தற்போது இணைந்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியை அகற்றுவதாக திமுக கூறிவருகிறது. அது நடக்குமா?

தற்போது இருக்கும் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். இதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? 89 எம்.எல்.ஏ-க்களை வைத்து திமுக-வால் எதுவும் செய்யமுடியாது. அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களை கூட்டினால் கூட கிட்டத்தட்ட 100 தான் வருகிறது.

தற்போது திமுக தலைவர் கருணாநிதி மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால், தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார். கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதாகவே தெரிகிறது. அதனால், திமுக-வும் நெருக்கடியில் தான் இருக்கிறது.

மு.க ஸ்டாலின் செயல் தலைவராக மட்டும, அவர் திமுக-வின் தலைவர் அல்ல. மு.க ஸ்டாலினை பற்றி கூறவேண்டுமானால் அவர் செயல்படாத தலைவர் என்றே கூறலாம். தினமும் பல பகுதிகளை சென்று, மக்கள் கூட்டத்தை திரட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக, கருணாநிதியும் மக்கள் கூட்டம் திரண்டு வருவதாக கூறிவந்தார், ஆனால் ஓட்டுகள் விழுந்தது என்னவோ எம்.ஜி.ஆர் பக்கம் தான்.

அதிமுக குறித்து:

ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக உள்ளது. அதேபோல, சசிகலா சிறையில் இருக்கிறார். தற்போது பேசப்பட்டு வருவதெல்லாம், டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் ஒன்றிணைந்தது குறித்து தான். அவர்கள் இருவரும் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாகவே தெரிகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அவர்கள் காலக்கெடு விதித்துள்ள நிலையில், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் களம் இறங்குவதாக கூறப்படுகிறதே?

ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசி வருகிறாரே அவர் அரசியலில் களம் இறங்க மாட்டார். முன்னதாக நான் அரசியலில் ஈடுபட்டதற்கு, ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார். அப்போது, ஒரே நேரத்தில், நடிப்பு, அரசியல் என இரண்டு குதிரைகளில் பயணம் செய்வது முடியாத காரியம் என்று அவரே என்னிடம் கூறியிருந்தார்.

அதேபோல தான், நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் ஊழல் திளைத்திருக்கிறது. அப்படி இருக்கும் போது, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஊழல் குறித்து கேள்வி எழுப்புவதில் என்ன தவறு உள்ளது என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close