Advertisment

விக்கிரவாண்டியில் 84% வாக்குப்பதிவு: நாங்குநேரியில் 66-ஆக குறைந்தது

Tamil Nadu By Election:  இதற்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nanguneri Vikravandi by election

Nanguneri Vikravandi by election

Vikravandi, Nanguneri By-Election Poll News: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% வாக்குகளும், நாங்குநேரியில் 66.10% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

Advertisment

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானதாலும் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ திமுகவைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததாலும் இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.

இத்தேர்தலில், நாங்குநேரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகின்றனர். அதேபோல், காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான் குமாரும், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த இரு தொகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீத வாக்குகள் பதிவாயின. விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாங்குநேரி தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர் கள் ஓட்டுப்போடுவதற்காக 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அங்குள்ள சில வாக்குச்சாவடிகளில் எந்த பிரச்னையுமின்றி ஆண்களும் பெண்களும் காலை முதலே வாக்களித்தனர். ஆனால் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதை தொழில்நுட்ப நிபுணர்கள் சரிசெய்த பின்னர் அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. நாங்குநேரி வடுகச்சிமதில் பகுதியில் உள்ள 91 மற்றும் 92-வது எண் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. அதில் 92-வது எண் வாக்குச்சாவடியில் பழுதை உடனடியாக சரி செய்து விட்டனர்.

91-வது எண் வாக்குச்சாவடியில் பழுதை சரிசெய்ய முடியாததால் மாற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 1 மணிநேரம் வாக்குப்பதிவு நடக்கவில்லை. ஆகையால், நாங்குநேரியில் வாக்குப்பதிவு குறைய இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

Live Blog

Vikravandi, Nanguneri By Election :  தமிழகத்திலுள்ள, நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் இடைத்தேர்தல் குறித்த அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். இதனை ஆங்கிலத்தில் படிக்க Tamil Nadu Assembly By-Elections 2019 Voting LIVE Updates



























Highlights

    19:53 (IST)21 Oct 2019

    விக்கிரவாண்டியில் 84.36%, நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

    விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% வாக்குகளும், நாங்குநேரியில் 66.10% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

    18:36 (IST)21 Oct 2019

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாங்குநேரி தொகுதிக்குள் தேர்தல் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக கிராம நிர்வாக அதிகாரி சுடலை முத்து அளித்த புகாரின் பேரில் அவர் மீது நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    18:14 (IST)21 Oct 2019

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 

    17:47 (IST)21 Oct 2019

    மாலை 5 மணி நிலவரம்

    மாலை 5 மணி நிலவரப்படி, விக்கிரவாண்டியில் 76.41 % ; நாங்குநேரியில் 62.32% வாக்குகள் பதிவாகியுள்ளன

    17:09 (IST)21 Oct 2019

    விக்கிரவாண்டி தொகுதியில் தேமுதிக – பா.ம.க. மோதலால் பரபரப்பு

    விக்கிரவாண்டி தொகுதி கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது பூத்தில் இயல்பாக வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்கு சுமார் 100 மீட்டர் அருகாமையில் பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு காவலர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போதிலும் அவரையும் மீறி தேமுதிக நிர்வாகிகள் 10 க்கும் மேற்பட்டோர் பாமக நிர்வாகி மணிகண்டனை தாக்கத் தொடங்கினர். உடனே அங்கிருந்து மற்ற காவலர்கள் வந்து அவர்களை மறித்து அனுப்பிவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

    16:28 (IST)21 Oct 2019

    "விக்கிரவாண்டியி​ல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

    விக்கிரவாண்டி தொகுதியில் சில வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் முயற்சி செய்வதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குறித்து அவதூறாக பேசிய அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்ததாகவும் கூறினார்.

    15:41 (IST)21 Oct 2019

    இடைத்தேர்தல் - 3 மணி நிலவரம்

    நாங்குநேரி - 52.18% வாக்குப்பதிவு

    விக்கிரவாண்டி - 65.79% வாக்குப்பதிவு

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி - 56.16% வாக்குப்பதிவு.

    15:29 (IST)21 Oct 2019

    தோல்வி பயத்தால் கைது - எம்.பி.வசந்தகுமார்

    நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் எம்பி கைது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி போலீசார் கைது செய்தனர். தோல்வி பயத்தால், தன்னை கைது செய்வதாக வசந்த குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    15:25 (IST)21 Oct 2019

    வாக்களித்த ஷாருக் கான்

    மகாராஷ்டிரா தேர்தல் : மும்பை மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஷாருக்கான் தனது மனைவியுடன் வாக்களித்தார்.

    14:48 (IST)21 Oct 2019

    Nanguneri By Election : நாங்குநேரியில் ஹெச்.வசந்தகுமார் கைது

    நாங்குநேரி தொகுதியில் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி. ஹெச்.வசந்தகுமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    14:27 (IST)21 Oct 2019

    Vikravandi, Nanguneri By Election : சத்யபிரத சாஹுவிடம் திமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார் மனு

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார் மனு.

    விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிகளவில் வெளியூர்வாசிகள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று, அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை வலியுறுத்துவதாகவும் திமுக புகார்.

    14:25 (IST)21 Oct 2019

    வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

    நா​ங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

    14:24 (IST)21 Oct 2019

    Nanguneri By Election : ரூ.1.66 லட்சம் பறிமுதல்

    நாங்குநேரி பட்டர்பிள்ளை புதூரில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    14:22 (IST)21 Oct 2019

    Nanguneri, Vikravandi By election : இரு பிரிவினர் இடையே மோதல்

    விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர் பகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    13:30 (IST)21 Oct 2019

    மதியம் 1 மணி நிலவரம்

    மதியம் 1 மணி நிலவரப்படி, விக்கிரவாண்டியில் 54.17% ; நாங்குநேரியில் 41.35% வாக்குகள் பதிவாகியுள்ளன

    13:00 (IST)21 Oct 2019

    மழை காரணமாக வாக்குப்பதிவு நீட்டிக்கப்படாது – சத்யபிரதா சாஹூ

    நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல், அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக, வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

    12:48 (IST)21 Oct 2019

    நாங்குநேரியில் இரண்டு ஓட்டு பதிவு செய்த வாக்காளர்!

    நாங்குநேரி தொகுதிக்கு உள்பட்ட வடுகச்சிமதில் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு போடப்பட்டது. அப்போது எந்திரம் சரியாக இயங்காததால், வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால், 2.30 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இரண்டாவது எந்திரத்தில் முதல் ஓட்டை தளவாய்பாண்டியன் என்பவர் பதிவு செய்தார். இரண்டாவது ஓட்டு போட்ட வாக்காளர், எந்திரம் சரியாக இயங்கவில்லை என்று புகாரளித்தார். இதனை அடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மூன்றாவதாக வேறு எந்திரம் கொண்டுவரப்பட்டது. பின்னர், மீண்டும் தளவாய் பாண்டியனை வாக்குப்பதிவு செய்ய தேர்தல் அதிகாரி அனுமதி அளித்தார். இதனை அடுத்து, இரண்டாவது முறையாக தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

    12:10 (IST)21 Oct 2019

    11 மணி நிலவரம்

    இடைத்தேர்தலில் காலை 11 மணிக்கு, நாங்குநேரியில்  23.89%,  விக்கிரவாண்டியில் 32.54%, புதுச்சேரி காமராஜ் நகர் 28.17% என்ற விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

    11:43 (IST)21 Oct 2019

    அமைதியான வாக்குப்பதிவு

    அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். 

    11:20 (IST)21 Oct 2019

    விக்ரவாண்டியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

    விக்கிரவாண்டி தொகுதி பிடாரிப்பட்டு ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

    11:07 (IST)21 Oct 2019

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவை அதிகாரிகள் கண்காணிப்பு

    10:52 (IST)21 Oct 2019

    வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார் - கே.எஸ்.அழகிரி

    செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, ”ரூபி மனோகரன்  நாங்குநேரி தொகுதியில் வெற்றிப் பெற்று, அத்தொகுதியை தன் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்வார் என்றும்,  ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார்” என்றும் குறிப்பிட்டார். 

    10:46 (IST)21 Oct 2019

    ரூபி மனோகரன் ட்வீட்

    அனைவரும் தவறாது வாக்களிக்கும் படி, நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    10:30 (IST)21 Oct 2019

    ராமதாஸ் ட்வீட்

    ”விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாக வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் பொய்களை விற்று வெற்றி பெற்றவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்!" என ராமதாஸ் ட்வீட்

    10:15 (IST)21 Oct 2019

    புதுச்சேரி நிலவரம்

    புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் ஆளும் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  கூறி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனும், அதிமுக-வினரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    09:58 (IST)21 Oct 2019

    கொட்டும் மழை

    நாங்குநேரியில் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்து விட்டு சென்றனர் வாக்காளர்கள். 

    09:49 (IST)21 Oct 2019

    வாக்குப்பதிவு விபரம்

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக, நாங்குநேரி - 18.41%,  விக்கிரவாண்டி - 12.84%, புதுச்சேரி காமராஜ் நகர் - 9.66% என்ற விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

    09:38 (IST)21 Oct 2019

    விக்ரவாண்டி வாக்குப்பதிவு நிலவரம்

    விக்கிரவாண்டியில் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

    09:28 (IST)21 Oct 2019

    நாங்குநேரி வாக்குப்பதிவு நிலவரம்

    நாங்குநேரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.75% வாக்குகள் பதிவாகி உள்ளது

    09:26 (IST)21 Oct 2019

    இயந்திரம் பழுது

    விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயந்திரக் கோளாறால் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு  235-ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க அலுவலர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். 

    09:07 (IST)21 Oct 2019

    வாக்குப்பதிவு 1 மணிநேரம் நிறுத்தம்

    விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எந்திரகோளாறால் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 

    08:29 (IST)21 Oct 2019

    விக்கிரவாண்டி நிலவரம்

    விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், தனது அலுவலகத்தில் இருந்து கண்காணித்து வருகிறார்

    08:09 (IST)21 Oct 2019

    நாங்குநேரியில் வாக்குப்பதிவு தாமதம்

    நாங்குநேரியிலுள்ள தெய்வநாயகிபேரியில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு 45 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதனால் சாரல் மழையிலும் வாக்காளர்கள் காத்திருந்தனர். 

    08:01 (IST)21 Oct 2019

    அதிமுக வேட்பாளர் வாக்களித்தார்

    விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கல்பட்டில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வாக்களித்தார் . இதற்கிடையே நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    07:53 (IST)21 Oct 2019

    வாக்குப்பதிவு தொடக்கம்!

    விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. அதேபோல் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

    Vikravandi, Nanguneri By Election : இடைத்தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஆளுங்கட்சி சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஜி.கே.வாசன், சரத்குமார், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடந்த சில வாரங்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி அனந்தன், திருநாவுக்கரசர், வைகோ, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பிரச்சாரம் செய்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இந்த தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இன்று மாலை 6 மணி வரை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதோடு அசம்பாவிதங்களை தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

     

    Election Commission
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment