அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான பலிகளுக்கு மக்கள் பதில் கொடுப்பார்கள் : விஷால் ஆவேசம்!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத மகனை அழைத்துச்சென்ற தந்தை மாரடைப்பால் பலியான சம்பவத்தில் நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவாரூரை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வெழுத எர்ணாகுளம் அழைத்துச் சென்றார். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அங்குச் சென்று நீட் தேர்வு மையப் பகுதியை கண்டறிய அலைச்சலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை தேர்வு மையம் புறப்படும்போது அவரின் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் தங்கியிருந்த ஓட்டலின் ஊழியர்களிடம் உதவிக் கேட்டர். ஊழியர்கள் மாணவனை மையத்திற்கு அழைத்துச் சென்று திரும்பியபோது கிருஷ்ணசாமி அசைவற்று இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது தெரிய வந்தது.

இது குறித்து நடிகர் விஷால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்:

“இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்.”

என்று கூறியுள்ளார்.

×Close
×Close