Advertisment

ஆர்.கே.நகரில் ஜனநாயகப் படுகொலை... ஜனாதிபதியிடம் புகார் செய்வேன் : விஷால்

நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப் பட்டதை ஜனநாயகப் படுகொலை என வர்ணித்தார். இது பற்றி ஜனாதிபதியிடம் புகார் செய்யவிருப்பதாக கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vishal, rk nagar, rk nagar bypoll, E.Madhusudhanan, aiadmk, ttv dhinakaran

நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப் பட்டதை ஜனநாயகப் படுகொலை என வர்ணித்தார். இது பற்றி ஜனாதிபதியிடம் புகார் செய்யவிருப்பதாக கூறினார்.

Advertisment

விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் விஷால், திடுதிப்பென தேர்தல் களத்தில் குதித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

விஷால் போட்டியிடுவது அதிமுக.வுக்கு சாதகமா, திமுக.வுக்கு சாதகமா? என்கிற விவாதங்களும் கிளம்பின. இந்தச் சுழலில் விஷாலுக்காக வேட்புமனுவை முன்மொழிந்த இருவர், அந்தப் படிவங்களில் இருப்பது தங்கள் கையொப்பம் இல்லை என ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் நேற்று (5-ம் தேதி) வேட்புமனு பரிசீலனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஷால் இது தொடர்பாக வேலு என்பவரிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசி, அந்த ஆடியோ பதிவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். அதில், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டி விஷாலுக்கு எதிராக கடிதம் பெற்றதாக வேலு கூறினார். இந்த ஆடியோ பதிவு அடிப்படையில் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பின்னர் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு மீண்டும் சம்பந்தப்பட்ட வேலு, சுமதி ஆகியோர் தேர்தல் அதிகாரி முன்பு ஆஜராகி, ‘விஷாலுக்கு நாங்கள் முன்மொழியவில்லை’ என வாக்குமூலம் கொடுத்தனர். இதன் அடிப்படையில் இரவு 11 மணியளவில் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா நகர் இல்லத்தில் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘எனக்கு முன்மொழிந்த இருவர் மிரட்டப்பட்டது தொடர்பான ஆடியோ பதிவை நான் சமர்ப்பித்த பிறகு எனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி என்னிடம் கொடுத்தார். உடனே அவருக்கு நன்றி தெரிவித்து, நான் கை குலுக்கினேன். இதெல்லாம் அரசு சார்பில் அமைக்கப்பட்ட கேமராவில் வீடியோவாக பதிவாகியிருக்கிறது. அதன்பிறகும் எனது வேட்புமனு தள்ளுபடி ஆகியிருப்பது ஜனநாயகப் படுகொலை.

இதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிதான் கூறவேண்டும். வேட்புமனு பற்றி முடிவெடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரி, எனது மனு பரிசீலனையின்போது மட்டும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதாக கூறினார். அவர் யாரிடம் போனில் உத்தரவு பெற்றார்? என்பது எனக்கு தெரியாது.

ஆர்.கே.நகரில் தெலுங்கு பேசுபவர்களின் வாக்குகளை குறி வைத்து நிற்கிறீர்களா? என கேட்கிறீர்கள். பள்ளிக்கூடத்தில் எனக்கு ஜாதியைச் சொல்லித் தரவில்லை. ஒரு இந்தியனாக இந்தத் தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். எனக்கு பின்னணியில் திமுக, டிடிவி தினகரன் ஆகியோர் இருப்பதாக சொல்வது பொய்யான வதந்தி.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றுவது மட்டும் இதற்கு தீர்வாகாது. அவரை மாற்றினாலும், எதற்காக மாற்றினார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். இந்த ஜனநாயகப் படுகொலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் இதற்கு ஒரு பதில் கிடைக்க வேண்டும். அதன்பிறகுதான் எந்த சுயேட்சையை ஆதரிப்பது? என்பதை முடிவு செய்வேன்.

அடுத்து என்ன செய்வது என்பது குறித்து லீகல் டீம் ஆலோசித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்புவோம்’ என்றார் விஷால்.

 

Vishal Ttv Dhinakaran E Madhusudhanan Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment