”தவறு இருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்” : விவேக் ஜெயராமன் விளக்கம்!

உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறி இருந்தால் கல்லூரியில் எனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்.

சட்டப்படிப்பில் முறைகேடாக இடம்பெற்றதாக விவேக் ஜெயராமன் மீது எழுந்துள்ள புகாரில்,  தவறு இருந்தால் தன் மீது  நடவடிக்கை எடுக்கும்படி விவேக்  விளக்கம் அளித்துள்ளார்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில்  3 ஆண்டு எல்.எல்.பி. படிப்பு படிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக சசிகலாவின் உறவினரும்,  ஜெயா டிவியின் சிஇஓ -வான விவேக் ஜெயராமன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அதேப்போல், 2015ம் ஆண்டு மூன்றாண்டு எல்.எல்பி ஹானர்ஸ் படிப்பில் வெளி நாட்டு இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமன் சேர்க்கப்பட்டார்.

ஆனால், இந்திய தூதரகத்தின் சான்றிதழ், வங்கி கணக்கு, உறுதி சான்றிதழ், தகுதி சான்றிதழ் என அதற்கான ஆதாரங்கள் எதுவுமே அவரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியது. இதனையடுத்து, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விவேக்கிற்கு எதிரான கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து, விவேக் ஜெயராமன், விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ”என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. . சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற என் சகோதரி மூலம் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் தான் நான் படித்தேன்.  அதற்கான முறையான சான்றிதழ்களை சமர்பித்தேன்.  அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.  உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறி இருந்தால் கல்லூரியில் எனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்.

சட்டப்படிப்பில்  சேர்ந்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாலும், வேறு சில வேலைகளாலும் படிப்பைத் தொடர முடியாமல் விலகிவிட்டேன். இது தான் நடந்த உண்மை. நான் முறைகேடாக சீட் வாங்கியதாக சிலர் வேண்டுமென்றே விஷமத்தனமான தகவல்களை உண்மைக்கு மாறான அவதூறுகளை உள்நோக்கத்தோடு பரப்புவது கொஞ்சமும் நியாயமற்றது.

என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள். மேலும்,   என் பெயரை சொல்லி என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவை அவர்கள் சந்திக்க வேண்டிவரும். அமைச்சர் ஜெயக்குமார் இதன் பின்னணியில் இருக்கும் எந்த ஒரு தகவலையும், உண்மையும் ஆராயாமல் என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவரின் மிரட்டல்களை சட்டப்படி நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

×Close
×Close