VK Sasikala News: இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலை ஆவது சாத்தியமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கிடையே அவரது தரப்பில் போயஸ் கார்டனில் புதிதாக கட்டி வரும் பங்களா தொடர்பாகவும் சர்ச்சை எழுந்திருக்கிறது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார். அவரது 4 ஆண்டுகள் தண்டனை, வருகிற ஜனவரி 27-ம் தேதியுடன் நிறைவு பெறும்.
எனினும் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகிறவர்களுக்கு நன்னடத்தை அடிப்படையில் ஆண்டுக்கு 36 நாட்கள் தண்டனையை குறைக்க சிறை விதிகளில் இடம் இருக்கிறது. அந்த அடிப்படையில் சசிகலா இந்த மாதம் இறுதியிலேயே விடுதலை ஆவார் என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
அதேசமயம், பெங்களூரு சிறையில் சசிகலா சிறப்பு வசதிகளை தனக்கு ஏற்படுத்திக் கொண்டதாக சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா ஐபிஎஸ் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. இது சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய முட்டுக்கட்டையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தவிர, நன்னடத்தை விதி அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கைதி அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் சசிகலா மற்றும் அவருடன் சிறையில் இருக்கும் இளவரசி, சுதாகரன் ஆகிய யாரும் இதுவரை அப்படி விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது. எனவே சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகும் முயற்சியில் இல்லையா? என்கிற கேள்வியும் இருக்கிறது.
சசிகலா விடுதலை ஆனால், அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்? அதிமுக தலைவர்கள் அவரை சந்திப்பார்களா? டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்காக அவர் பணி புரிவாரா? என பல கேள்விகள் சசிகலா விடுதலையை சுற்றி வட்டமிடுகின்றன.
இதற்கிடையே சசிகலாவின் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அண்மையில் வருமான வரித்துறை முடக்கியிருக்கிறது. அதில் சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீடு எதிரே சசிகலா புதிதாக கட்டி வரும் பங்களாவும் அடங்கும். இந்த பங்களாவிற்கான இடம் வாங்க மணல் அதிபர் ஒருவரிடமும், மருத்துவமனை அதிபர் ஒருவரிடமும் சசிகலா தரப்பு பல கோடிகளை கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் அறப்போர் இயக்கம், சனிக்கிழமை இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது. எனவே சசிகலாவை சுற்றிய சர்ச்சைகள் ஓய்வதாக இல்லை.