டிடிவி தினகரன் கொடுத்த பதவி தேவையில்லை: எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அதிரடி

டிடிவி தினகரன் கொடுத்த பதவி தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கொடுத்த பதவி தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இரட்டை இல்லை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறை சென்றார். அவர் சிறை செல்லும் முன்னர், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருப்பதாக தெரிவித்தார். அந்த சமயத்தில் அதிமுக அம்மா அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசம் வந்தது. பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து தினகரனை புறக்கணித்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன், கட்சி நடவடிக்கைகளில் இறங்கினார். அவருக்கு ஆதரவாகவும் சில எம்எல்ஏ-க்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இரு அணிகளையும் இணைக்கும் பொருட்டு தினகரன் 60 நாட்கள் காலக்கெடு அளித்தார். அவர் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக தனது சுற்றுப்பயணத்தை நேற்று அறிவித்தார். தொடர்ந்து, கட்சியில் புதியதாக 64 நிர்வாகிகளை நியமித்து அடுத்த அதிரடியை வெளிப்படுத்தினார். இது அதிமுக-வில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டிடிவி தினகரன் கொடுத்த பதவி தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு தெரியாமல், தன்னிச்சையாக, தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ள படாத டிடிவி தினகரனால் எனக்கு கழக மகளிர் அணி இணை செயலாளராக பொறுப்பு அறிவிக்கவிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழகமும், ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். எனவே இந்த பதவியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஜெயலலிதா கொடுத்த எம்எல்ஏ பதவியே எனக்கு போதும். வேறு எந்த பதவியும் வேண்டாம். புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவி என்னை கேட்கமாலேயே எனக்கு வழங்கப்பட்டுள்ளது.தினகரன் சிறையில் இருந்து வந்த பிறகு நான் அவரை சந்திக்கவில்லை. நான் அவருக்கு ஆதரவாகவும் இல்லை என ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ பழனியும் தினகரன் அளித்த பதவியை நிராகரித்துள்ளார்.

×Close
×Close