scorecardresearch

weather news updates: கனமழை காரணமாக இன்று 6 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Chennai weather forecast live: தமிழகம் மற்றும் புதுவையில் பெய்து வரும் கனமழை தொடர்பான செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

weather news updates: கனமழை காரணமாக இன்று 6 மாவட்டங்களுக்கு விடுமுறை…
Chennai Weather,Chennai Weather News,Chennai Weather Forecast,வானிலை,வானிலை அறிக்கை,சென்னை வானிலை

Chennai weather news, IMD Chennai weather forecast: கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், “தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாக்குமரி மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் குறிப்பிட்ட இடங்களில் தீவிர கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன.தென்மேற்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடலில் உள்ள காற்று இழுக்கப்படுவதால் நிலவும் வளி மண்டல சுழற்சியாலும், தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையாலும் , தமிழகத்திற்குகன மழை பெய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 14-க்கும் அதிகமான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

விடுமுறை

கனமழை காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும், வடலூர், சிதம்பரம் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Live Blog

Chennai weather forecast

தமிழகம் மற்றும் புதுவையில் பெய்து வரும் கனமழை தொடர்பான செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.


17:59 (IST)02 Dec 2019

சென்னை வார்டு 82இல் டி.என்.எச்.பி காலனி பகுதியில் சூழ்ந்த கழிவுநீர் கலந்த மழை வெள்ளம்

சென்னை மாநகராட்சி 82வது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வசதியின்றி, மழை வெள்ளத்துடன் கழிவு நீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

17:55 (IST)02 Dec 2019

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான விவகாரம்; உறவினர்கள் போராட்டம்; போலீஸ் தடியடி

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் உறவினர்கள், பொதுமக்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

17:26 (IST)02 Dec 2019

சென்னை சோழிங்கநல்லூரில் தேங்கிய மழைநீரை நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ

சென்னை சோழிங்கநல்லூர் பரமேஸ்வரி நகர் பகுதியில் சாலைகளிலும், வீடுகளிலும் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் விடுத்தனர். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அரவிந்தன் ரமேஷ் அரசு அதிகாரிகளை அழைத்து மழை நீரை வெளியேற்ற அறிவுறுத்தி ஆய்வு மேற்கொண்டார்.

17:11 (IST)02 Dec 2019

மதுராந்தகத்தில் கனமழையால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது; விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்துள்ள தட்டாம்பேடு அரசினர் மேல்நிலை பள்ளி கட்டிடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. பயன்பாட்டில் இல்லாத அந்த கட்டிடத்தில்தான் இது நாள் வரை மாணவர்கள் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

16:58 (IST)02 Dec 2019

மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதி தெருக்களில் சூழந்த வெள்ள நீர்

தொடர்மழை காரணமாக சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

16:47 (IST)02 Dec 2019

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதை வெள்ளநீர் புகுந்தது; பொதுமக்கள் அவதி

சென்னை தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் மழை வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

16:14 (IST)02 Dec 2019

சென்னை சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன்

சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், சைதை 170வது வட்டத்தில் உள்ள செட்டித் தோட்டம், நெருப்பு மேடு, நாகிரெட்டி தோட்டம், கிண்டி, அடையாறு ஆற்றங்கரையில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு மற்றும் காற்றில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

16:11 (IST)02 Dec 2019

தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

15:43 (IST)02 Dec 2019

சென்னை முடிச்சூர் பகுதியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ள நீர்

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மகாலக்ஷ்மி நகர் பகுதியில் வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

15:37 (IST)02 Dec 2019

செங்கல்பட்டுவில் பெய்த கனமழை வீடியோ பாருங்க

கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. இன்று செங்கல்பட்டுவில் கனமழைபெய்து வருகிறது.

15:29 (IST)02 Dec 2019

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

சென்னை செம்மஞ்சேரி – பொல்லினேனி ஹில்சைட் பகுதியில் சாலைகள் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

15:19 (IST)02 Dec 2019

சென்னை கொரட்டூர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது; பொதுமக்கள் அவதி

சென்னை கொரட்டூ பகுதியில் உள்ள சென்ட்ரல் அவென்யூவில் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

14:52 (IST)02 Dec 2019

சென்னை வரதராஜபுரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் புகுந்த வெள்ள நீர்

சென்னை முடிச்சூர் வரதராஜபுரத்தில் உள்ள நூற்றுக் கணக்கான வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

14:42 (IST)02 Dec 2019

சென்னை துரைப்பாக்கம் பகுதி தெருக்கள், வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள குமரன்குடில் 5வது தெரு கனமழை காரணமாக தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

14:36 (IST)02 Dec 2019

கடலூரில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதி உதவி

கடலூர் கம்மியம்பேட்டையில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவியும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், அவர்களின் வீட்டுக்கு சென்ற ஸ்டாலின் திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார். பின்னர் மழை பாதிப்பால் கூத்தப்பாக்கம் பகுதியில் பள்ளியில் தங்கியுள்ளோரை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

13:34 (IST)02 Dec 2019

சென்னை செம்மஞ்சேரியில் சூழ்ந்த வெள்ள நீர்; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

சென்னை சோழிங்க நல்லூர் அருகே உள்ள செம்மஞ்சேரி பகுதியில் மழையால் சாலைகள், தெருக்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

13:21 (IST)02 Dec 2019

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய கேரள அரசு தயார் – பினராயின் விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் டுவிட்: கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய கேரள அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

13:02 (IST)02 Dec 2019

டிசம்பர் 3, 4 தேதிகளில் தமிழகம் புதுவையில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குனர்

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்: வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட 11% அதிகம் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 36 செ.மீ.க்கு பதில் 40 செ.மீ. மழை பெய்துள்ளது. டிசம்பர் 3, 4 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று  தெரிவித்துள்ளார்.

12:32 (IST)02 Dec 2019

குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. மணமேல்குடி பகுதியில் கண்மாய்களில் திறந்து விடப்பட்ட உபரி நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், பேரிடர் மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

12:20 (IST)02 Dec 2019

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மழையால் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

11:59 (IST)02 Dec 2019

வெள்ளப் பெருக்கால் 200 பேர் மீட்பு

ராமேஸ்வரம் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 200 பேர் மீட்கப்பட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

11:48 (IST)02 Dec 2019

ராமேஸ்வரத்தில் கனமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 112 மி.மீ. மழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் மழையால் சேதம் அடைந்தன.

11:34 (IST)02 Dec 2019

கடலூரில் உயிரிழந்தவர்களுக்கு திமுக நிவாரணம்

கடலூரில் பெய்த தொடர் கனமழையால் கடந்த 29 தேதி கம்மியம் பேட்டை பகுதியில் நாராயணன் என்பவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் இரவு உறங்கிக்கொண்டிருந்த போது அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மனைவி மாலா, மகள் மகேஸ்வரி, பேத்தி தனஶ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று  வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்த குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர். 

11:22 (IST)02 Dec 2019

கோவையில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்

கோவை நடூர் பகுதியில் கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிவாரணம் அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

10:43 (IST)02 Dec 2019

கோவையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்பு

கோவையில் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

10:31 (IST)02 Dec 2019

சென்னை மழையில் வாகனங்கள் மிதந்து சென்றன

தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று இடைவிடாது மழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகனங்கள் மிதந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

10:16 (IST)02 Dec 2019

வெள்ளத்தில் அடித்துச் சென்ற பசுக்கள்

கடும் மழையால் கடலூரில் கெடிலம் ஆற்றில் 10 பசுக்கள் அடித்து செல்லப்பட்டன.  ஆகாய தாமரை செடிகளில் சிக்கி தவித்த அந்த மாடுகளை பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பாக மீட்டனர்.

09:59 (IST)02 Dec 2019

விழுப்புரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில், வீடுர் அணை திறக்கப்பட்டதால், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

09:45 (IST)02 Dec 2019

அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்

பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது. இதனால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்

09:33 (IST)02 Dec 2019

கோவையில் கனமழைக்கு 15 பேர் பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 4 வரிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. கோவையில் பலத்த மழை பெய்த நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஒன்பது மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ள நிலையில், கோவையில் பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

09:08 (IST)02 Dec 2019

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்றும் தொடர்ந்தது. எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, மயிலாப்பூர், கிண்டி, அண்ணாநகர், சைதாபேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. அதோடு சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

08:48 (IST)02 Dec 2019

நிரம்பியது சென்னை ஏரிகள்

நேற்று பெய்த கனமழையால் சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 51 மில்லியன் கனஅடி உயர்ந்து 989 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. சோழவரத்தில் 2 மில்லியன் கனஅடி உயர்ந்து 96 மில்லியன் கனஅடியாகவும், புழலில் 35 மில்லியன் கனஅடி உயர்ந்து 1,639 மில்லியன் கனஅடியாகவும், செம்பரம்பாக்கத்தில் 100 மில்லியன் கனஅடி உயர்ந்து 749 மில்லியன் கனஅடியாகவும் நீர்மட்டம் இருக்கிறது.

08:38 (IST)02 Dec 2019

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாக்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை  விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார். 

08:33 (IST)02 Dec 2019

வீடு இடிந்து விழுந்து 9 பேர் பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் என்ற கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து 4 பெண்கள், சிறுமி உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

08:17 (IST)02 Dec 2019

வீட்டுக்குள் புகுந்த மழைநீர்

சென்னை கொரட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மழைநீர் புகுந்ததது. சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஒரு சில குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

08:10 (IST)02 Dec 2019

மிக கனமழை எச்சரிக்கை

மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்றும், நேற்று முன் தினமும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலை இன்றும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இந்த மழை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tamil Nadu Weather News : சென்னையில் நேற்று முதல் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று தென்சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. ஏற்கெனவே தாம்பரம் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், வந்தவாசி பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Weather chennai news live imd chennai weather forecast tamil nadu rains fresh alerts