Advertisment

எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் எடப்பாடி சொன்னது என்ன?

மாவட்டவாரியாக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் சந்தித்து வருகிறார். அப்போது எம்.எல்.ஏ.க்களிடம் என முதல்வர் என்ன சொன்னார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Ockhi, CM Edappadi k Palanisami, Missing Fisherman, Search ship, CM Interview,

முதல் அமைச்சர் எடப்பாடி க பழனிச்சாமி

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றிலிருந்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை மாவட்டவாரியாக சந்திக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் செல்கின்றனர்.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் நடக்கும் இந்த சந்திப்பின் போது, கட்சியின் நிர்வாகிகளோ, துணை முதல் அமைச்சரோ இருப்பதில்லை. முதல்வர் நேரடியாக எம்.எல்.ஏ.க்களிடம் பேசுகிறார். முதல் நாள் விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, நாகை, நெல்லை, அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்களுடன் சந்தித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ.க்களை இப்படி சந்திப்பது இது முதல் முறையல்ல. தினகரன் சிறையில் இருந்து வந்ததும், அவரை எம்.எல்.ஏ.க்கள் 36 பேர் சென்று பார்த்தனர். அடுத்த நாளில் இருந்தே மாவட்டவாரியாக எம்.எல்.ஏ.க்களை கோட்டையில் சந்தித்து பேசினார். அப்போது டிடிவி தினகரனை சந்தித்த, தங்கதமிழ் செல்வன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்போது, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் மனு கொடுத்துவிட்டு, புதுவை சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இதனிடையே கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என 200 பேரை அழைத்து ஆலோசனை நடத்தினார். டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என நினைத்த முதல்வருக்கு பெரிய அதிர்ச்சி.

தினகரனுக்கு ஆதரவாக மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். கூட்டணி கட்சியினரைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள முடியாது. மீதமுள்ள 115 எம்.எல்.ஏ.க்களில், அமைச்சர்கள் 33 பேர் போக 82 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் 72 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

டிடிவி தினகரன் சொன்னது போல, சிலிப்பர் செல்லாக இவர்கள் இருப்பார்களோ என சந்தேகம் அரசியல் அரங்கில் தீயாக பரவியது. தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை உறுதி செய்யவே, எம்.எல்.ஏ.க்களை மாவட்டவாரியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொன்னார் என்று கேட்டறிந்தோம்.

‘‘டிடிவி தினகரனின் 19 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்த பின்னரும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கவர்னர் சொல்லிவிட்டதை பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். இனி யாரும் இந்த ஆட்சியை எதுவும் செய்துவிட முடியாது. மத்திய அரசு நமக்கு முழு ஆதரவு கொடுக்கிறது. யாராவது ஏதாவது சொன்னார்கள் என்று எங்காவது போய்விடாதீர்கள். இன்னும் நான்காண்டுகள் ஆட்சி முழுமையாக நடக்கும்.

டிடிவி தினகரன் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால், அவருக்கு உரிய மரியாதை கொடுத்திருப்போம். அவருக்கு வேண்டியதை செய்து கொடுத்திருப்போம். அவர் அவசரப்பட்டுவிட்டார். அவருக்கு என்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது எண்ணமல்ல. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்கிறார். அவர் திமுகவோடு கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

புதுவையில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான உதவிகளை ஸ்டாலின் மருமகன் சபரிசன் தான் செய்து வருகிறார். அவரும் புதுவையில் தங்கியிருந்து, ஆட்சியை கவிழ்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார். அம்மாவின் ஆட்சியை கலைக்க நீங்கள் துணை போய்விடாதீர்கள். நாம் அனைவரும் இப்போது ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கும் தொகுதிக்கும் என்ன தேவையோ அதை நான் நிச்சயம் செய்து தருகிறேன். எந்த நேரம் வேண்டுமானாலும் நீங்கள் என்னை சந்திக்கலாம். பேசலாம்.’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.

முதல்வரின் பேச்சு, மத்திய அரசு எங்களோடு இருக்கிறது. இதை மீறி எதுவும் யாரும் செய்ய முடியது என்பதை வலியுறுத்துவதாகவே இருந்ததாக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். தினகரன் வெளியே வந்த போது, ஆட்சியைப் பற்றியோ, தினகரன் பற்றியோ எதையும் சொல்லவில்லை. இப்போது திமுகவுடன் டிடிவி.தினகரன் கூட்டணி வைத்திருபப்தாக சொன்னதாகவும் தெரிவித்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment