ஜெயலலிதா இறந்தது எப்போது? காலையில் சொன்னதை இரவில் மறுத்த திவாகரன்

காலையில் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதியே இறந்துவிட்டதாக கூறிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், இரவு அதனை மறுத்ததோடு, அப்பலோ மீது குறை சொல்லவில்லை என்றார்.

By: Published: January 18, 2018, 11:43:51 AM

காலையில் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதியே இறந்துவிட்டதாக கூறிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், இரவு அதனை மறுத்துள்ளார். அவருக்கு என்ன நெருக்கடி வந்தது என்பது தெரியவில்லை.

மன்னார்குடியில் நேற்று காலையில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய திவாகரன், அப்போலோ மருத்துவமனை அறிவிப்பதற்கு முதல்நாளே, அதாவது டிச.4-ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், நேற்றிரவு சுந்தரக்கோட்டையில் நிருபர்களை சந்தித்த திவாகரன், காலையில் தான் பேசியதை மறுத்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

மருத்துவத் துறையில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என இருவகை உண்டு. அப்போலோ மருத்துவமனையில் டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது கிளினிக்கல் டெத் என கூறுவர்.

இதைத் தொடர்ந்து கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் உயிரைக் காப்பாற்ற முடியுமா என மருத்துவர்கள் முயற்சி எடுத்து வந்தனர். அப்போலோ மருத்துவர்களிடம் இருந்துதான் நான் இந்த தகவலை தெரிந்துகொண்டேன். அப்போலோ மருத்துவர்களிடம் கேட்டோம் என்று சொன்னாலே அது ரெட்டியிடம் கேட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.

மருத்துவத்தில் கிளினிக்கல் டெத் ஆனவர்களை 24 மணி நேரத்துக்குமேல் பயாலஜிக்கல் டெத் ஆகாமல் பாதுகாக்க முடியாது என்பது மருத்துவர்களின் கருத்தாகும். அப்போது மூளை செயல்பட்டுக் கொண்டே இருக்கு.

இதையடுத்து, சிகிச்சையில் இருந்தவர் முதல்வர் என்பதால், அரசு விதிப்படி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து நரம்பியல் மருத்துவர்கள் வந்து அவரது இறப்பை டிச.5-ம் தேதி உறுதிப்படுத்தினர். அதன் பின்னர்தான் அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதாவின் இறப்பை அறிவித்தது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், சிலர் அரசியல்ரீதியாக எடுத்த முயற்சிகளை தொண்டர்களுக்கு விளக்குவதற்காகவே மேற்கண்ட கருத்துகளை கூறினேன். அது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. எனது நோக்கம், அப்போலோ நிர்வாகத்தின் மீதோ, பிரதாப் ரெட்டி மீதோ அல்லது வேறு யார் மீதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பது இல்லை என்றார்.

முன்னதாக அப்பலோ தரப்பில், ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதிதான் இறந்தார் என்று மறுப்பு தெரிவித்திருந்தனர்.

டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார் – திவாகரன் அதிரடி பேச்சு படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:When did jayalalitha die diwakaran refuted in the morning what he said in the morning

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X