Advertisment

தமிழ்நாடு என சொல்லக் கூடாதா? மாலனுக்கு எழுந்த எதிர்வினைகள்

கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் தமிழ்நாடு - தமிழகம் என்ற சர்ச்சை தீயாக பற்றி எரிகிறது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் தமிழ்நாடு என்றும் ஒன்றிய அரசு என்றும் ட்ரெண்டிங் ஆனது.

author-image
WebDesk
New Update
Which is right Tamil Nadu or Thamizhagam, Tamil Nadu, Tamil Nadu government, Thamizhagam,tamil nadu name controversy, தமிழ்நாடு, தமிழகம், சர்ச்சை, மத்திய அரசு, ஒன்றிய அரசு, union, central, federal

மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இரண்டு நாட்களாக நமது மாநிலத்தை தமிழகம் மற்றும் தமிழ்நாடு என்று அழைப்பது குறித்தும் ஒன்றிய அரசா அல்லது மத்திய அரசா என்று சர்ச்சையால் சமூக ஊடகங்களும் இணையதளும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

Advertisment

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கேரளா, ஆந்திரப் பிரதேசம் பிரிந்து சென்ற பிறகு, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி எழுந்த பல்வேறு போராட்டங்கள், கோரிக்கைகளைத் தொடர்ந்து, அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 1968 நவம்பர் 23ம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசு நிர்வாகத்திலும் அலுவல்களிலும் தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால், செய்திகளிலும் அறிக்கைகளிலும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் பேசும் மக்களை அகத்தே கொண்ட தமிழ்நாட்டை தமிழகம் என்றும் தமிழக அரசு என்றும் செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வந்தது.

இதுவரை தமிழ்நாடு என்றோ அல்லது தமிழகம் என்றோ அழைத்துவந்ததில் எந்த பிரச்னையும் பெரியதாக எழவில்லை. அவ்வப்போது இப்படி அழைப்பது சரியா என்ற விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால், அது பெரிய அளவில் கவனம் பெறவில்லை. ஆனால், மூத்த பத்திரிகையாளர் மாலன் தனது ஃபேஸ்புக்கில் தமிழ்நாடல்ல, தமிழகம் என்று பதிவு எழுத, அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் தமிழ்நாடு - தமிழகம் என்ற சர்ச்சை தீயாக பற்றி எரிகிறது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் தமிழ்நாடு என்றும் ஒன்றிய அரசு என்றும் ட்ரெண்டிங் ஆனது.

பத்திரிகையாளர் மாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடல்ல, தமிழகம் என்று குறிப்பிட்டு எழுதியிருப்பதாவது: “தமிழ் நாடல்ல, தமிழகம்

Govt of Tamilnadu என்பதை தமிழ்நாடு அரசு என்று நம் மாநில அரசு அலுவல் பூர்வமான ஆவணங்களிலும், பொது வழக்கிலும் குறித்து வருகிறது. அதற்கு மாற்றாக தமிழக அரசு என்றும் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்றும் குறிக்குமாறும் அழைக்குமாறும் நாம் கோருவோம்.

அகம் என்ற சொல்லுக்கு மனம், இல்லம், வதிவிடம் எனப் பல இனிய அர்த்தங்கள் உண்டு. தமிழை அகத்தே கொண்ட பகுதி தமிழகம். தமிழகம் என்ற சொல் தமிழின் இல்லம் என்பதைக் குறிக்கும். ஒரு நாட்டில், ஏன் உலகிலேயே தமிழின் இல்லம் தமிழகம் என்ற தமிழ்நாடுதான்.அந்த நிலப்பகுதியை தமிழின் மனம், தமிழர்களின் மனம் என்றும் கொள்ளலாம்.

இந்தச் சொல் நமக்குப் புதிதும் அல்ல. நூலகம், தொழிலகம், உணவகம், மருந்தகம் தலைமையகம் என்ற சொற்கள் பரவலாக வழக்கில் உள்ளன. திமுக இளைஞர் அணியின் தலைமை நிலையத்தின் பெயர் அன்பகம். தமிழக அரசு ஒன்றின் பெயர் எழிலகம்.

பழந் தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் ஆகியோர் தத்தம் நிலப்பகுதிகளை தங்களுக்கெனெ தனி இறையாண்மை கொண்ட அரசு, (மகுடம்) கொடி, படை இவை கொண்டு ஆட்சி செலுத்திய போது தங்கள் பகுதிகளை நாடு என்றழைத்தனர். தனி இறையாண்மை இல்லாத சிற்றரசுகளும் நாடு என்று தங்களை அழைத்துக் கொண்டன. (எடுத்துக் காட்டு, வேணாடு, ஆய்நாடு, அருவா நாடு, சீதநாடு, குட்டநாடு) ஆனால் அவை எல்லாவற்றிலும் தமிழ் வழங்கப்பட்டதால் அவை அனைத்தும் தமிழகம் என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்பட்டன.

‘வையக வரைப்பில் தமிழகம்’ கேட்ப என்பது புறநானுற்றில் ஒரு வரி (பாடல் 168 வரி 18) பிட்டன் கொற்றன் என்ற ஒரு சிற்றரசனின் வள்ளல் தனமையை தமிழகம் முழுக்கப் பாடுவேன் என்கிறார் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார். ‘இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க; என்று தமிழகத்திற்கு எல்லை வகுக்கும் பதிற்றுப்பத்தின் வரியை இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய எனத் தமிழ் மொழி வழங்கிய பகுதிகள் அனைத்தையும் குறிக்கப் பயன்படுத்துகிறார்.

ஆனால் தமிழ் நாடு எனச் சொல் பண்டை இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நானறியேன். தமிழ் கூறு நல்லுலகம், தமிழ் வரம்பு (வரம்பு=எல்லை) என்ற சொற்கள் உண்டு. தமிழ்நாட்டகம் என்ற ஒரு சொல் பரிபாடலில் உண்டு. ஆனால் அதிலும் அகம் என்பதும் இணைந்தே குறிக்கப்படுகிறது.



திருக்குறள் வகுக்கும் வரைவிலக்கணமும் (definition) தமிழ்நாட்டிற்குப் பொருந்துவதாக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. “பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு. (குறள் 735) என்கிறார். இதற்கு மு.கருணாநிதி “பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்” என்று தனது உரையில் விளக்கமளிக்கிறார். (ஆனால் குறளில் “சிறந்த” என்பதைக் குறிக்கும் சொல் ஏதுமில்லை) சாலமன் பாப்பையாவின் விளக்கம் மிகையின்றி நடுநிலையாகப் பழகு தமிழில் அமைந்துள்ளது: “சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு ”இந்த நாடா தமிழ் "நாடு"?



வள்ளுவரின் இன்னொரு வரைவிலக்கணத்தைப் பார்ப்போம்: “நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. (குறள் 739). என்ன அர்த்தம்? “தேடவேண்டாத வளத்தினை யுடைய நாட்டை நாடென்று சொல்லுவர்: தேடினால் வளந்தருகின்ற நாட்டை நாடல்ல வென்று சொல்லுவர்”என்று இதை விளக்குகிறார் மு.வ.இன்று நமக்கு காவிரி கர்நாடகத்திலிருந்து வருகிறது. சென்னைக்கு கிருஷ்ணா ஆந்திரத்திலிருந்து வருகிறது. தடுப்பூசி தெலுங்கானாவிலிருந்தும், மராட்டியத்திலிருந்தும் வருகிறது. ஆக்சிஜன், ஒடிஷாவிலிருந்தும் ஜார்க்கண்டிலிருந்தும் வருகிறது. காய், கனி, சமையலுக்குப் பயன்படுத்தும் பல பொருட்கள் வெளியிலிருந்து வருகின்றன. பலதுறைகளில் பணியாற்றும் மனித வளத்தை வெளியிலிருந்து பெற்று வருகிறோம்.



எனவே தமிழ் மரபைப் பின்பற்றி நம் மாநிலம் தமிழகம் என அழைக்கப்பட வேண்டும் என்றே அரசைக் கோருவோம். அரசு அவ்விதம் அறிவிக்கும் வரை நாம் தமிழ்நாடு என்ற சொல்லைத் தவிர்த்து தமிழகம் என்றே அழைத்து வருவோம். மாநில அரசை தமிழக அரசு என்றும் மத்திய அரசை இந்திய அரசு என்றும் அழைப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாலனின் இந்த கருத்துக்கு மூத்த பத்திரிகையாளர்கள், திமுகவினர், இடதுசாரிகள், பெரியாரியர்கள், தமிழ்த்தேசியர்கள் என பலதரப்பினரும் தமிழ்நாடுதான், மத்திய அரசு அல்ல இந்திய அரசு அல்ல, ஒன்றி அரசு என குறிப்பிட்டு எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் பலரும் தமிழ்நாடு என்று பைந்தமிழ் இலக்கியங்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், #தமிழ்நாடு, #ஒன்றிய அரசு என்ற வார்த்தைகள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

அதே நேரத்தில், மாலன் தமிழகம் என்ற சொல்லை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியே பயன்படுத்தியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment