Advertisment

ஸ்டாலின் வழியைத் தொடர்வாரா உதயநிதி; சென்னை மேயர் யார்?

திமுகவில் சென்னையின் மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் வழியில் தொடர்வாரா? அல்லது அவருடைய வழியில் செல்வாரா? என்ற எதிர்ப்பார்ப்பும் கேள்விகளும் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
who will be chennai mayor, dmk, udhayanidhi folllow MK Stalin's way, cm mk stalin, ஸ்டாலின் வழியைத் தொடர்வாரா உதயநிதி, சென்னை மேயர் யார், திமுக, tamil politics, udhayanidhi

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளட்சி தேர்தலை டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிடிக்க வேண்டும் என்பதில் ஆளும் திமுக அரசு உறுதியாக இருந்தாலும், திமுகவில் தலைநகர் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி யாருக்கு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தான் மறையும் வரை திமுக தலைவராக இருந்தார். அரசியலில், திமுகவில் கருணாநிதிக்கு பிறகு, மு.க.ஸ்டாலின்தான் என்பது பல்வேறு கால கட்டங்களில் உறுதியாகி வந்துள்ளது. கருணாநிதி முதலில் மு.க. ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவியைத்தான் அளித்தார். அப்போதுதான், கட்சியின் வருங்கால தலைவர்களுடன் வளரமுடியும் என்ற நோக்கத்தில் அந்தப் பதவியை அளித்தார்.

கருணாநிதி மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து எம்.எல்.ஏ-வாகி இருந்தாலும் அவரை சென்னை மேயராக்க முடிவு செய்தார். அதுவரை சென்னை மேயர் பதவி கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அதோடு, ரோஸ்டர் முறைப்படி அந்த முறை சென்னை மேயராக ஒரு பட்டியல் இனத்தவர் மேயர் பதவி வகிக்க வேண்டும். அதனால், மு.க.ஸ்டாலினை மேயராக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மேயர் வேட்பாளரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

மு.க.ஸ்டாலின் சென்னை மேயரானார். கருணாநிதி, ஸ்டாலினை அமைச்சராக்காமல் முதலில் அவரை சென்னை மேயராக்கினார். சென்னை மேயர் பதவி என்பது கிட்டத்தட்ட தமிழ்நாட்டையே நிர்வகிப்பது போன்றது. ஸ்டாலின் மேயரானது சிங்கார சென்னை திட்டத்தைக் கொண்டு வந்தார். மேயராக பணியாற்றிய அனுபவம்தான் ஸ்டாலினுக்கு இப்போதும் கைகொடுக்கிறது. அதனால்தான், இப்போதும் மழை, வெள்ள பாதிப்பு என்றால் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று ஆய்வு நடத்த முடிகிறது என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.

மு.க.ஸ்டாலின் மேயர் ஆன பிறகுதான், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை முதல்வர் பதவியும் வகித்தார். துனை முதல்வர் ஆனாலும் சென்னை தனது மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், தனக்கு மிகவும் நெருக்கமான மா.சுப்பிரமணியனை சென்னை மேயராக்கினார். இப்போது அவர் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். அதனால்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மகன் உதயநிதியை வலிமைப்படுத்த சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உதயநிதி நேரடியாக அமைச்சராக விரும்புவதாகவும் மேயர் பதவியை விரும்பவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம், இந்த முறை திமுக அரசு, பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்தாமல் மறைமுக தேர்தல் அதாவது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதே காரணம் என்கிறார்கள். ஏனென்றால், மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்துவதற்கு கோவை, சேலம் மாநகர திமுகவினர் சற்று கலக்கத்தை தெரிவித்தது ஒரு காரணம் என்கிறார்கள்.

உதயநிதிக்கு எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டு மீண்டும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு அதன் பிறகு மேயர் ஆவதில் விருப்பமில்லை என்கிறார்கள். மு.க.ஸ்டாலின் தன்னுடைய வழியில் உதயநிதி மேயராகி பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பயிற்சி பெற்று வளர வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், உதயநிதி நேரடியாக அமைச்சராக விரும்புகிறார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி தொடர்ந்து மறுத்துவருவதால்தான், திமுகவில் சென்னையின் மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் வழியில் தொடர்வாரா? அல்லது அவருடைய வழியில் செல்வாரா? என்ற எதிர்ப்பார்ப்பும் கேள்விகளும் எழுந்துள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Local Body Election Udhyanidhi Chennnai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment