Advertisment

51 விதமான தகவல் சேகரிப்பு; யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி? ஸ்டாலின் பட்டியல்

Who will get jewelry loan cancel benefits in tamilnadu: கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி யாரு யாருக்கெல்லாம் கிடைக்கும்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
jewellers protesting against new hallmarking process, Chennai hallmarking unique ID, HUID, BIS, நகைக்கடைகள், நகைக்கடை உரிமையாளர்கள் ஸ்டிரைக், ஹால்மார்க், புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு, சென்னை, தமிழ்நாடு, The Chennai Jewellers’ Association, Bureau of Indian Standards, Jwellers token strike, tamil nadu jewellers

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ் அளித்த அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில், பத்தி 264-ல், ‘கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சரவனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  அதனை நிறைவேற்றும் விதமாக தங்களது அனுமதியோடு, 110 விதியின் கீழ் நான் அறிவிப்பினை வெளியிட விரும்புகிறேன்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கையின் மீது, கடந்த 25-8-2021 அன்று நடந்த விவாதத்தின் போது, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள், கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி, எவ்வாறு 2 இலட்சத்து 42 ஆயிரத்து 783 நபர்களுக்கு, 2 ஆயிரத்து 749 கோடியே 10 இலட்சம் ரூபாய் தவறாகத் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை விரிவாக விளக்கிப் பேசினார்.

அந்த விவாதத்தின்போது, தொடர்ந்து பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவ்வாறான தவறுகள் நகைக் கடன்களிலும் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த வகையில் நடைபெற்றுள்ளன என்பதையும் விளக்கி, எனவே நகைக் கடன்கள் ஒவ்வொன்றையும் தீவிரமான மற்றும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே தள்ளுபடி செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதை இந்த அவையிலே தெரிவித்திருந்தார். அதன்படி, அனைத்து நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதனடிப்படையில், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். இந்த நகைக் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து, தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, தொகுக்கப்பட்டு கணிணி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அவ்வாறு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைக் கடன்கள் வழங்கப்பட்டதிலும்,  பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நகைக் கடன் தள்ளுபடி செய்கையில் சரியான, தகுதியான ஏழை எளிய மக்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே, 5 சவரனுக்கும் குறைவாக நகைக் கடன் பெற்றவர்களில் சில நேர்வுகளில் தள்ளுபடி செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனக் கருதப்படுகிறது.    

எடுத்துக்காட்டாக, 2021 ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றவர்கள்; தவறாக ஏஏஒய் (அந்தியோதயா அன்ன யோஜனா) குடும்ப அட்டையைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நகைக் கடன் பெற்றவர்கள்; மற்றும் இதுபோன்ற மேலும் சில நேர்வுகளில் வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்ய இயலாது. இதுகுறித்த விபரமான வழிமுறைகளை கூட்டுறவுத் துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும்.  

இந்த நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளிவந்தவுடன், முறையற்ற வகையில் தள்ளுபடி பெறவேண்டும் என்கிற தவறான நோக்கத்தோடு, நகைக் கடன்களைப் பெற்றிருப்பதும், குறிப்பாக, சில மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்களின்மீது தகுந்த நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும். 

மேற்கூறியவாறு, தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுறவு நிறுவனங்கள் இனி நேர்மையாக, திறமையாக, ஏழை எளிய விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன் பெறும் வகையில் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.  முழுமையான கணினிமயமாக்கம், நவீன வசதிகளுடன் கூட்டுறவு நிறுவனங்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, எதிர்காலத்தில் சிறப்பாக நடத்திச் செல்லப்படும் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment