Advertisment

திமுக அரசுக்கு அடுத்தடுத்து பாராட்டு: அதிமுகவில் இப்படியும் டீம் உருவாகிறதா?

Why former ADMK ministers praising DMK govt: அரசின் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக தமிழக அரசு கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாராட்டி வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
திமுக அரசுக்கு அடுத்தடுத்து பாராட்டு: அதிமுகவில் இப்படியும் டீம் உருவாகிறதா?

புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பாராட்டி வருகின்றனர். முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், ஸ்டாலின் தலைமையிலான அரசின் கொரோனா தடுப்பு பணிகளை பாராட்டியுள்ளனர். இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸூம் தமிழக அரசை பாராட்டியுள்ளார்.

Advertisment

இப்படி எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து தமிழக அரசை பாராட்டி வருவது ஆச்சரியமளிப்பதுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாள் முதல், திமுக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைய அரசு பதவியேற்றபோது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார். மேலும்,  எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிகாரிகள் என்று மொத்தமாக எல்லோரும் களமிறக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் தமிழக அரசு, தற்போது கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் விஷயத்திலும் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருகிறது. இந்த நிலையில்தான் அரசின் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக தமிழக அரசு கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் பாராட்டி வருகிறார்கள்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத்தொகை என்ற தமிழக அரசின் அறிவிப்பை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டியிருந்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார். ஒபிஎஸ் தமிழக அரசிடம் அவ்வப்போது சில கோரிக்கைகளையும் வைத்து வருகிறார். அந்த கோரிக்கைகள் ஏற்கப்படும் போதும், அல்லது அரசு நல்ல முடிவுகளை எடுக்கும் போதும் அரசை ஒபிஎஸ் பாராட்டி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் சரியில்லை என கூறி இருந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் வேலுமணியும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்னொரு புறம் திமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஓபிஎஸ், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர். இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என தற்போது கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு முன்பிருந்தே ஸ்டாலின் அதிமுக ஆட்சி கமிஷன், கரப்ஷன், கலக்சென் என இருப்பதாக கூறி இருந்தார். தற்போது அதிமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகளை ஒவ்வொன்றாக விசாரிக்கும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யும் முடிவிலும் தமிழக அரசு இருக்கிறது.

இது போக பல்வேறு ஒப்பந்தங்கள், நிதி ஒதுக்கீடு என்று பல விஷயங்களை விசாரிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக தலைவர்கள் பலரும் திமுக அரசை பாராட்டி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சிலர் அறிவாலயத்திற்கு தூது அனுப்பி வருகின்றனர். ஆட்சிக்கு அனுசரணையாக சென்றால், தப்பித்துவிடலாம் என்ற திட்டமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதலுக்கு இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிமுகவில் இப்போது பன்னீர்செல்வத்திற்கும் பழனிச்சாமிக்கும் இடையே  மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பும் அறிக்கை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை தமிழக அரசை பாராட்டவில்லை. அவருக்கு நெருக்கமான சில அதிமுக எம்எல்ஏக்களும் கூட அரசை பாராட்டவில்லை. ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பு எம்எல்ஏக்கள் திமுக அரசை பாராட்டி வருகின்றனர். இது இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

திமுக அரசை பாராட்டுவதிலும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பக்கம் திமுக ஆட்சியை பழனிச்சாமி விமர்சிக்கிறார். இன்னொரு பக்கம் பன்னீர்செல்வம் பாராட்டுகிறார். இந்த கருத்து வேறுபாடு ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அரசியலில் எதுவும் சாதாரணமாக நடந்து விடாது. ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கும். அப்படி இருக்கும் போது ஓபிஎஸ் உள்ளிட்ட சில அதிமுக தலைவர்கள் திமுகவை பாராட்டுவதற்கு கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கும். ஆனால் எதை மனதில் வைத்து இப்படி பாராட்டுகிறார்கள் என்பதுதான் தற்போது புதிராக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Stalin Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment