Advertisment

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் ஏன் போகவில்லை? விளக்கம் இதோ!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் விதிமுறைகளை மீறி பேனர்களை வைத்து நடைபெறும் ஆடம்பர விழாவுக்கு வரமாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MGR Birth Centenary Celebrations, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை புறக்கணித்த மு.க.ஸ்டாலின்

MGR Birth Centenary Celebrations, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை புறக்கணித்த மு.க.ஸ்டாலின்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்களை வைத்து நடைபெறும் ஆடம்பர விழாவுக்கு வரமாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Advertisment

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடி முடித்தார்கள். நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) அன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்ற முறையிலும் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அவரது பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பங்கேற்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Read More: எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா: ஸ்டாலின், டிடிவி, கனிமொழிக்கு அழைப்பு!

மு.க.ஸ்டாலின் ஏன் பங்கேற்கவில்லை? இதோ, அதற்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

‘சென்னையில் 30.09.2018 அன்று நடைபெறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன்.

இந்த விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையேயான நட்பு குறித்தும் தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், அவருடையை அருமை பெருமைகளைப் பரப்புவதை விட; எதிர்க்கட்சியான தி.மு.கழகத்தையும், குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டி மகிழ்ந்திருந்த தலைவர் கலைஞர் அவர்களையும், அவரது குடும்பத்தாரையும், கலைஞர் பெரிதும் நெருக்கமாக நேசித்த இயக்கத்தினரான உடன்பிறப்புகளையும், கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதலமைச்சரில் தொடங்கி துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததை, தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

முதலமைச்சர் உள்ளிட்டோரின் அந்த நாகரிகக் குறைவான அணுகுமுறையை மக்களவை துணைச் சபாநாயகர் அவர்களுக்கு நினைவூட்டிட விரும்புகிறேன். நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் நடத்தப்படும் ஆடம்பரமான முறையில் - உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பல நூறு விளம்பர பேனர்களை பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

தற்போது என்னிடம் கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பை நினைவூட்டும் தம்பிதுரை அவர்களும், அழைப்பிதழில் பெயர் இடம் பெறச் செய்திருந்த முதலமைச்சர் –துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும், 2016 ஜனவரியிலேயே முறைப்படி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரிடம் நினைவூட்டியிருக்கலாம்.

அப்போது எம்.ஜி.ஆர் அவர்களையே மறந்துவிட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, ஓராண்டு காலம் தாழ்த்தி, அரசியல் காரணங்களுக்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கடைசியாகக் கையிலெடுத்திருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடில்லை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் என் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர். கழகப் பிரச்சார நாடகங்களில் நான் பங்கேற்றபோது தலைமையேற்று சிறப்பித்தவர். அதனை நன்றியுடன் நினைவுகூர்ந்து, அவருடைய நூற்றாண்டு தொடக்கத்திலேயே முரசொலியில் “உங்களில் ஒருவன்” பகுதியில் எழுதியிருக்கிறேன் என்பதை நினைவூட்டுகிறேன்.

அதுபோலவே, அரசு சார்பிலான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலருக்கும் என்னுடைய கட்டுரையைத் தந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர். என்பதை பொது அரங்குகளிலேயே சொல்லியிருக்கிறேன்.

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு. அதனை அரசியலாக்காமல் நாளையாவது எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் விழாவாக அவரது நூற்றாண்டைக் கொண்டாட அரசினரை வலியுறுத்துகிறேன்.’ இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தனது அறிக்கையுடன் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்களின் புகைப்படங்களையும் மு.க.ஸ்டாலின் இணைத்திருக்கிறார்.

 

Mk Stalin Mgr Mgr Centenary Function
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment