ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பிளவு ஏன்? என நிர்வாகிகள் விளக்கம் தெரிவித்தனர். சிபிஎம் சார்பு சங்கம் மாறுபட்ட நிலை எடுத்ததை குறிப்பிட்டனர்.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், உயர்மட்டக்குழு உறுப்பினர் பி.கே.இளமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை..
அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே அனைவருக்கும் வணக்கம். மனதின் இருக்கத்தோடு இதனை பதிவு செய்கிறேன். சூலை 18 தொடங்கி மூன்று கட்ட போராட்டத்தினை நடத்தி முடித்துள்ளோம். செப்டம்பர் 4 அன்று சென்னையில் மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
30.9.17 க்குள் ஊதியக் குழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தள்ளிப்போகும் நிலை வருகின்ற போது இடைக்கால நிவாரணம் வழங்குகிறோம் என உறுதி அளித்தார்கள். தன்பங்களிப்பை பொறுத்த வரையில் 30.11.17 அன்று குழு அறிக்கைக்குப் பிறகு நல்ல முடிவை எடுக்கிறோம் என உறுதி தந்தார்கள். அதனை ஜேக்டோ - ஜியோ ஏற்காமல் செப்டம்பர் 7 முதல் தொடர் வேலை நிறுத்தத்தை தொடருவது என முடிவெடுத்தோம்.
திடீரென செப்டம்பர் 5 அன்று நமது ஒருங்கிணைப்பாளர் தலைமைச் செயலக தலைவர் அவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைத்துக் கொண்டு நேராக மாண்புமிகு முதல்வர் அவர்களைச் சந்தித்தார்கள். மாண்புமிகு முதல்வரோ, ‘நானே ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களை சந்திக்கிறேன்’ என்றும் அதற்கு செப்டம்பர் 6 ஈரோட்டில் சந்திக்கலாம் என்று சொன்னதன் அடிப்படையில் அன்று மாண்புமிகு முதல்வரை சந்தித்தோம்.
அவரும் கோரிக்கைகள் சார்ந்து பேசி அமைச்சர்கள் பேசியதையே மீண்டும் கூறி நான் நல்லது செய்கிறேன் என அழுத்தமாக கூறினார். முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மீண்டும் ஜேக்டோ தனியாகக் கூடியது. ஜாக்டோவில் உள்ள சிபிஎம் சார்புடைய சங்கங்களைத் தவிர அனைத்து இயக்கங்களும் வேலை நிறுத்தத்தை அக்டோபர் 15 வரை தள்ளி வைப்பது என முடிவு எடுத்தோம். தலைமைச் செயலக சங்கமும் இதற்கு ஒத்து வந்துள்ளது.
கூடுதலாக ஜாக்டோ - ஜியோவில் உள்ள 79 சங்கங்களில் 54 சங்கங்கள் ஆசிரியர் சங்கங்கள். இதில் 8 சங்கங்களைத் தவிர அனைத்து சங்கங்களும் அக்டோபர் 15 வரை தள்ளி வைக்க ஏற்றுக் கொண்டன. ஜியோ-வில் சிபிஎம் சார்புடைய அரசு ஊழியர் சங்கம் தவிர அனைத்து சங்கங்களும் அக்டோபர் 15 வரை ஒத்தி வைக்கலாம் என முடிவு எடுத்தன.
கூட்டமைப்பில் பெருவாரியான சங்கங்கள் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 15 வரை தள்ளி வைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்ட பிறகு நாம் சிபிஎம் சார்புடைய இயக்கங்களோடு இணைந்து போராட முடியுமா ?. இளைய சகோதர , சகோதிரிகளின் வருத்தத்தை நான் உணர்வேன். நிலைத் தன்மை இல்லாத அரசு (அ) நிலைத் தன்மை உடைய அரசு என்று ஒன்றும் இல்லை.
அரசை நடத்துவது அமைச்சர்கள் மட்டும் அல்ல. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆவர். முதல்வர் நல்லது செய்து. தருகிறேன் என உறுதி மொழி அளித்துள்ளார். அவர் அதனை நிறைவேற்றவில்லை என்றால் நாளை உரிமையோடு கேட்கலாம். சண்டை போடலாம். நல்லதே நடக்கும் என நம்புவோம். இளவல்கள் கோபம் கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நியாயம் வெல்லும்.
இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.