டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருமுல்லைவாயிலில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கடந்த மாதம் 29-ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் 21-பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என 21-பேர் தரப்பில் கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக விசாரணை நடத்திய கீழ் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பிரசன்னா என்பவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய ஜாமீன் மனுவையும் கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பிரசன்னாவின் தாயார் இறந்து விட்டதால், அவரை பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். மேலும், 21-பேரையும் விடுவிக்க உத்தரவிடுவதாகவும், வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த வழக்கை அவசர வழக்காக மதியம் 2:15-க்கு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து, பின்னர் மதியம் விசாரணையை தொடங்கினர். அப்போது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக் கூடாது. இது தொடர்பான உத்தரவை நாளை பிறப்பிப்பதாக நீதிபதி கூறினர். மேலும், இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த திருமுல்லைவாயில் ஆய்வாளர் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அவருக்கு அபராதம் விதிக்க இருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

×Close
×Close