Advertisment

டிடிவி.தினகரனை தவிர்த்த சசிகலா : 2-வது நாளும் தனியாக மருத்துவமனை சென்றார்

வி.கே.சசிகலா தனது கணவர் ம.நடராஜனை சந்திக்க இரு தினங்களும் தனியாக மருத்துவமனைக்கு சென்றார். இதனால் டிடிவி தினகரனை அவர் தவிர்ப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
, v.k.sasikala, tamilnadu, aiadmk, tamilnadu government, tamilnadu ministers, m.natarajan, cm edappadi palaniswami, ttv dhinakaran, v.k.sasikala kept distance from ttv dhinakaran

வி.கே.சசிகலா தனது கணவர் ம.நடராஜனை சந்திக்க இரு தினங்களும் தனியாக மருத்துவமனைக்கு சென்றார். இதனால் டிடிவி தினகரனை அவர் தவிர்ப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

Advertisment

வி.கே.சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ஏழரை மாதங்களுக்கு பிறகு கடந்த 6-ம் தேதி பரோலில் வெளியே வந்தார் அவர். சென்னை பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது கணவர் ம.நடராஜனை பார்ப்பதற்காகவே பரோல் பெற்றார் அவர்.

வி.கே.சசிகலா பெங்களூரில் இருந்து காரில் சென்னைக்கு வந்தபோது, அதே காரில் முன் இருக்கையில் இருந்தபடி டிடிவி.தினகரன் வந்தார். வழிநெடுக சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளையும் டிடிவி தினகரன் உத்தரவுப்படியே அவரது ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

சென்னை தி.நகரில் இளவரசியின் மகள் இல்லத்தில்தான் சசிகலா தங்கியிருக்கிறார். 6-ம் தேதி இரவு சசிகலா தி.நகர் வந்து சேர்ந்தபிறகு செய்தியாளர்களை டிடிவி.தினகரன் சந்தித்தார். அப்போது, ‘சசிகலாவுக்கு கடுமையான பரோல் நிபந்தனைகள் விதிக்கப்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமியே காரணம்’ என குற்றம்சாட்டினார்.

அதோடு, ‘சில அமைச்சர்கள் போனில் சசிகலாவிடம் பேசியதாகவும்’ பேச்சுவாக்கில் டிடிவி தினகரன் போட்டு உடைத்தார். இதை சசிகலா விரும்பவில்லை என்கிறார்கள். ‘அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது’ என்பது சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் பரோல் நிபந்தனைகளில் ஒன்று! டிடிவி தினகரனின் கருத்து, அந்த விதிமுறையை மீறியதாக ஆகிவிடும் என சசிகலா வருத்தப்பட்டதாக கூறுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல், சசிகலா மீது இன்னும் பாசத்தில் இருக்கும் அமைச்சர்களை இக்கட்டில் சிக்க வைப்பதுபோல டிடிவி தினகரன் பேசுவதையும் சசிகலா விரும்பவில்லை. இதனாலேயே டிடிவி தினகரனை சசிகலா தவிர்ப்பதாக சொல்கிறார்கள்.

6-ம் தேதி இரவு சென்னைக்கு வந்த சசிகலா, முதல் முறையாக 7-ம் தேதி காலை 11 மணிக்கு தி.நகரில் இருந்து கிளம்பி பெரும்பாக்கம் சென்றார். அங்கு ம.நடராஜனை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, பிற்பகல் 2 மணிக்கு திரும்பினார். அப்போது டிடிவி தினகரனை அவர் உடன் அழைத்துச் செல்லவில்லை.

ஆனால் 7-ம் தேதி மாலை தி.நகர் இல்லத்திற்கு வந்த டிடிவி தினகரன் சுமார் 4 மணி நேரம் அங்கிருந்துவிட்டுச் சென்றார். அப்போது சசிகலா தனது அதிருப்திகளை அவரிடம் பட்டியலிட்டதாக ஒரு தரப்பு கூறுகிறது. மீண்டும் 8-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு தி.நகரில் இருந்து பெரும்பாக்கத்திற்கு சசிகலா கிளம்பினார்.

மாநிலங்களவை உறுப்பினரும் மகளிரணி செயலாளருமான விஜிலா சத்யானந்த், நடிகை சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட மகளிர் அணியினர் மட்டுமே அதிகமாக தி.நகர் வீட்டு முன்பு நின்றிருந்தனர். அவர்களை பார்த்து புன்னகையுடன் கைகுவித்து வணங்கினார் சசிகலா!

கோட்டூர்புரம் பகுதிக்கு சசிகலா வந்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். அவர்களுக்கும் காரில் இருந்தபடியே வணக்கம் தெரிவித்துவிட்டு, கடந்து சென்றார் சசிகலா. கேளம்பாக்கத்தில் இருந்து பெரும்பாக்கம் மருத்துவமனை செல்லும் வழியிலும் திரளான கட்சிக்காரர்கள் கூடி நின்று வரவேற்பு கொடுத்தனர்.

இந்த வரவேற்பு ஏற்பாடுகளின் பின்னணி டிடிவி தினகரன் தான் என்றாலும், இன்றும் சசிகலாவுடன் அவர் மருத்துவமனைக்கு செல்லாதது கட்சிக்காரர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பகல் 11.40 மணிக்கு பெரும்பாக்கம் மருத்துவமனையின் உள்ளே சென்ற சசிகலா, பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்தார்.

கிட்னி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நடராஜன் பேசும் நிலையில் இல்லை. எனவே அவரை சில நிமிடங்கள் மட்டுமே அருகில் நின்று சசிகலா பார்த்ததாக கூறுகிறார்கள். நீண்ட நேரம் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை விவரங்களை சசிகலா முழுமையாக கேட்டதாக சொல்லப்படுகிறது.

‘டிடிவி தினகரன் அவசரப்பட்டு ஆர்.கே.நகரில் களம் இறங்கியதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம். அவர்தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட்டு கட்சி உடைபட காரணமாகிவிட்டார்’ என அமைச்சர்கள் சிலரே சசிகலாவிடம் போனில் கூறியதாகவும், அதனால்தான் டிடிவி தினகரனை சசிகலா தவிர்ப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

 

M Natarajan V K Sasikala Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment