மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் காட்டு யானை,மான்,காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரினை தேடி வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் – வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள சமயபுரம் பகுதியில்
இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஒற்றைக்காட்டு யானை பாகுபலி சாலையை ஒய்யாரமாக கடந்து வீடுகளை தாண்டி சென்றது.எனினும் இதுவரை பாகுபலி யானை எவரையும் தாக்கியது இல்லை என்பதால் அப்பகுதி மக்களும் இதனை சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர்.
எனினும் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்ச உணர்வு உடனேயே சாலையை கடந்து செல்கின்றனர்.மேலும் கடந்த இரு மாதங்களாக பாகுபலி காட்டு யானை தங்களது பகுதிக்கு வராமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பாகுபலி யானை ஊருக்குள் உற்சாகமாக வலம் வரத்துடன் தொடங்கியுள்ளது.
எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாகுபலி யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தகவல் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“