சட்டமன்றம் கூடும் வரை ஆளும் கட்சி நிலைக்குமா? மு.க ஸ்டாலின்

போகின்றன போக்கில் அதிமுக இன்னும் எத்தனை அணிகளாக பிளவுபடுமோ என்ற கேள்விதான் எழுகிறது

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கூடும் வரை ஆளும் கட்சியின் ஆட்சி நிலைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள காரப்பாறையில் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிடுவதற்காக மு.க ஸ்டாலின் சென்றிருந்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 14-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறது. அதுவரை இந்த எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சட்டசபை கூடினால் திமுக ஜனநாயக கடமையை சிறப்பாக ஆற்றும்.

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படங்கள் அரசு அலுவலங்களில் இருக்கின்றன. அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படம் வைக்கப்பட்டுள்ளதில் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

அதிமுக-வை பொறுத்தவரையில் ஜெயலலிதா இருக்கும் வரை ஒரணியாக இருந்தது. அவர் மறைந்த பிறகு இரண்டு அணிகளாக மாறி, தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டிருக்கிறது. போகின்றன போக்கில் அதிமுக இன்னும் எத்தனை அணிகளாக பிளவுபடுமோ என்ற கேள்விதான் எழுகிறது என்று கூறினார்.

×Close
×Close