அடுத்தடுத்து சவால்: ஒரே மேடையில் செங்கோட்டையன் - அன்புமணி விவாதிப்பார்களா?

அமைச்சர் செங்கோட்டையனின் சவாலுக்கு, அன்புமணி பதில் சவால் விடுத்துள்ளதால் இருவரும் ஒரே மேடையில் விவாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வி துறையை விமர்சித்து அறிக்கை விடுபவர்கள் என்னுடன் ஒரே மேடையில் விவாதத்துக்கு தயாரா என அதிரடி சவால் விட்ட அமைச்சர் செங்கோட்டையனுக்கு, இடத்தையும், நேரத்தையும் அறிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சுடச்சுட பதில் சவால் விடுத்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்றவுடன் கல்வி கற்றல் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி வருகிறது. பொதுத் தேர்வுகளில் தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, மேல்நிலைக் கல்வியில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ் நாடு மாநில கல்வி திட்டம், பாடத்திட்டம், பாடநூல் எழுதும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாயமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட, தமிழக அரசின் பாடத்திட்டம் தரமானதாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பள்ளி கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு முக்கிய காரணமாக அறியப்படுபவர் உதயச்சந்திரன். இந்நிநிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,”ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்கவில்லை என்பதால் அவரை பள்ளிக் கல்வித் துறையில் இருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான தேவை தரமான கல்வி வழங்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, அந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,”பள்ளிக்கல்வி துறையை விமர்சித்து அறிக்கை விடுபவர்கள் என்னுடன் ஒரே மேடையில் விவாதத்துக்கு தயாரா?” என்று அதிரடி சவால் விட்டார்.

அமைச்சர் செங்கோட்டையனின் சவாலுக்கு சுடச்சுட உடனடியாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதில் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையனின் அறைகூவலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். விவாதத்தை மக்கள் நேரடியாக பார்த்து மதிப்பீடு செய்துகொள்ள வசதியாக விவாதம் செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட வேண்டும் என்பது மட்டும் தான் எனது நிபந்தனையாகும். இதை ஏற்றுக் கொண்டு விவாதம் நடத்துவதற்கான இடம் மற்றும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தால் அந்த தேதியில் அவருடன் விவாதம் நடத்த நான் தயார்” என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்து விடுத்துள்ள சவால்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் இருவரும் ஒரே மேடையில் விவாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் சூழ்ந்துள்ளது.

×Close
×Close