தமிழருவி மணியனின் திருச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்களா ரஜினி ரசிகர்கள்?

மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நிறைய பிரபலங்கள் வெளிப்படையாக தங்களது கருத்துகளை பதிவு செய்து கொண்டு வருகின்றனர். அந்த கருத்து, எந்த துறையின் மீதோ கூட இருக்கலாம்.. அது பிரச்சனையில்லை… ஆனால், ஜெயலலிதா இருக்கும் வரை வாய் திறக்கப்படவேயில்லை. இருப்பினும், ரஜினிகாந்த் இதற்கு சற்று விதிவிலக்கு என்று கூட சொல்லலாம். 1995-ல் சிவாஜி கணேசனுக்கு ‘செவாலியே’ விருது வழங்கும் விழாவில், மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஜெயலலிதாவை நேருக்கு நேராக பார்த்து விமர்சனம் செய்தார் ரஜினி. அதன்பின், 1996-ல் தேர்தல் சமயத்தின் போது, ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என்றார்.

அதன்பின், அரசியல் குறித்த பேச்சுக்களை குறைத்துக் கொண்டு, சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த ரஜினி, சுமார் எட்டு வருடங்கள் கழித்து, கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இனி மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்து, போட்டோக்கள் எடுத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரஜினி, “என்னை வாழ வைத்த மக்களுக்கு நான் திரும்பி ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாதா? நம்மை யார் தூற்றினாலும் அதைப் பற்றி ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. போர் வரும் போது சொல்கிறேன். அதுவரை உங்கள் வேலையைப் பாருங்க” என்று சொல்லி, தனது ரசிகர்களிடம் புதிய புத்துணர்ச்சியை தீவிரமாக விதைத்தார்.

இதையடுத்து, ரஜினியின் இந்தப் பேச்சு குறித்து தான் தமிழகத்தின் பேச்சாக இருந்தது. நிறைய ஆதரவுகளும், அதைவிட நிறைய எதிர்ப்புகளும் வந்து குவிந்தன. இருப்பினும், இந்த நிமிடம் வரை அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற தெளிவான பதில் இல்லை என்பதே உண்மை.

இந்தச் சமயத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், ரஜினி தரப்பில் இருந்து மறுப்பு ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழக அரசை நடிகர் கமல் கடுமையாக விமர்சித்தார். அவரும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து, தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் போது, ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தமிழருவி மணியன் பேச இருக்கிறார். மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ரஜினி தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து இதுவரை எந்தவொரு அழைப்பு நேரடியாக விடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இதனால், ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்களா என்பது குறித்து இதுவரை எந்தவொரு முறையான அறிவிப்பும் வெளியாகவில்லை.

×Close
×Close