உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது: 2.50 லட்சம் கோடி முதலீடு எதிர்பார்ப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடக்கிறது

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை கொள்கை 2019ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடக்கிறது. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் புதிய, பழைய தயாரிப்புகள் குறித்து பார்வைக்கு வைக்க உள்ளன. இன்று தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும், ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது. மதியம் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடக்கிறது.

இதைத் தொடந்து, மாநாட்டின் 2வது நாள் காலை 10 மணிக்கு சிறு,குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்குடன் தொடங்குகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மாலை 3 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை 66,000 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே தமிழகம் பெற்றுள்ளது. இம்முறை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், வரும் ஆண்டுகளில் முழு அளவில் முதலீடு கிடைக்குமா? என்பது தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close