Advertisment

அருகி வரும் “ஈரநிலங்கள்” - மக்கள் விழிப்படைவது எப்போது?

1970களில் இருந்து இத்தகைய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35% ஈரநிலங்கள் காணாமல் போய்விட்டது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
அருகி வரும் “ஈரநிலங்கள்” - மக்கள் விழிப்படைவது எப்போது?

Degradation of Nilgiris wetlands : உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி) ஈரநிலங்கள் தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. எப்படி காடுகள், பாலைவனங்கள் மற்றும் பனிப்பிரதேசங்கள் இயற்கையின் ஓரங்கமாக திகழ்கிறதோ அவ்வாறே இத்தகைய ஈரநிலங்களும் திகழ்கின்றன. இத்தகைய நிலங்களின் தேவை என்ன என்பதை உணராத பொதுமக்கள் பல நேரங்களில் தங்களின் தேவைகளுக்காக இதனை ஆக்கிரமிக்கும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்த நிலங்களின் தேவை என்ன என்பதையும் இத்தகைய நிலங்களால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், ஈரநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஆண்டு தோறும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

ஈரானிய நகரமான ராம்சரில் 2 பிப்ரவரி 1971 அன்று ஈரநிலங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட தேதியான இன்று ஈரநிலங்களுக்கான தினம் கொண்டாடப்படுகிறது. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்தை 75 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்ட பிறகு, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தினமாக இந்த ஆண்டுமுதல் ஈரநிலங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி ஈரநிலங்களின் நிலைமை என்ன?

ஈரநிலங்கள் - காடுகளுக்கு இணையாக இந்த நிலங்களை பாதுகாக்க வேண்டியது தொடர்பான விழிப்புணர்வு இன்றும் மக்கள் மத்தியில் குறைவாகவே இருக்கிறது. 1970களில் இருந்து இத்தகைய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35% ஈரநிலங்கள் காணாமல் போய்விட்டது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் அல்லது உவர்நீர் ஈரநிலங்கள் தமிழகத்தில் அதிகப்படியாக காணப்படுகிறது. நகரமயமாக்குதல், விவசாயத்திற்காக ஈரநிலங்களை ஆக்கிரமித்தல் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சுற்றுலாத்துறை போன்றவையோடு, மோசமான திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நீலகிரியில் ஈரநிலங்களின் தன்மையை மாற்றுவதோடு அதனை நம்பியிருக்கும் விலங்குகள், பறவைகள் மற்றும் இன்னபிற உயிரினங்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

“ராம்சர் சாசனத்தின் (Ramsar sites) கீழ் வரும் நிலங்களை தவிர்த்து பல சிறிய மற்றும் குறு ஈரநிலங்கள் பெரும்பாலான நேரங்களில் புறம்போக்கு நிலங்களாகவே கருதப்படுகிறது. இத்தகைய சிறிய மற்றும் குறு ஈரநிலங்கள் அதிக அளவில் நீலகிரியில் காணப்படுகின்றது. சில செண்ட்டுகளில் துவங்கி சில ஏக்கர்கள் வரை பரவி இருக்கும் இத்தகைய நிலங்கள் தான் நீலகிரியின் நீர்வள ஆதாரத்திற்கு உயிர்மூச்சாக உள்ளது. ஆண்டு முழுவதும் நீலகிரியில் இருந்து ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை இந்த நிலங்களே உறுதி செய்கின்றன.

அழிவின் விளிம்பில் இருக்கும் கானமயில், இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறதா? ஒரு விரிவான அலசல்

பொதுவாக இந்த நிலங்கள் வழியாக பாய்ந்தோடும் நீரை சுத்தகரிக்கும் பண்பு கொண்ட ஈரநிலங்கள், வெளியேற்றப்படும் மண்ணின் அளவையும் கணிசமாக குறைக்கும் இயற்கையான அமைப்பை கொண்டுள்ளது. இன்றைய சூழலில் நீரில் அடித்துவரப்படும் மக்காத குப்பைகள், சுற்றுச்சூழலுக்கு அபாயமான பொருட்கள் மற்றும் அழியாத பொருட்களையே திரட்டி சேமித்து வைத்திருக்கும் மண்டலங்களாக ஈரநிலங்கள் இருக்கின்றன. இது ஈரநிலங்களின் தன்மையை மாற்றுவதோடு, அதனை சுற்றியிருக்கும் நிலத்தின் தன்மையையும் சுற்றுச்சூழலையும் மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.

வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் தொழிற்துறைக்கு தேவையான நீர் அளவு அதிகரித்து வருகின்ற நிலையில் இத்தகைய ஈரநிலங்கள் மீதான மனிதனின் ஆக்கிரமிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டு கட்டமைப்புகள் ஏதும் அற்ற சூழலில் இத்தகைய நிலங்களின் தன்மை மாற்றம் கூடுதல் அழுத்தத்தை கொண்டிருக்கிறது. சமயங்களில் தங்களின் நீர் தேவைக்காக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் இத்தகைய நிலங்களை நம்பியிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது” என்று அறிவித்தார் நீலகிரியை தளமாக கொண்டு செயல்படும் நீர்வளவியலாளர் (Hydro-geologist) கோகுல் ஹலன்.

இங்கிலாந்து சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, உலகில் உள்ள 90% ஈரநிலங்கள் 1700ம் ஆண்டுகளுக்கு பிறகு அழியத் துவங்கியுள்ளது. மேலும் இன்று உலகில் வாழும் உயிரினங்களில் 40% உயிரினங்கள் தங்களின் இனப்பெருக்க தேவை மற்றும் வாழ்க்கைக்காக ஈரநிலங்களையே நம்பியுள்ளன. மேலும் 25% நன்னீர் உயிரினங்கள் இந்த ஈரநிலங்கள் இழப்பால் அழிவின் விளிம்பில் உள்ளன.

ஆழ்துணை கிணறுகள் மூலமாக நீரை எடுக்கும் போது நீர் மட்டுமின்றி நீரின் மூல ஆதாரங்களையும் செயல்பாட்டில் இருக்கும் நீர்நிலை அமைப்புகளின் தன்மையையும் வெகுவாக குறைக்கிறது. இப்படியான சூழலின் போது ஏற்படும் இயற்கை பேரிடர்கள் அதிகப்படியான வளப்பற்றாக்குறைக்கு காரணமாக அமைவதோடு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளையும் தீவிரப்படுத்துகிறது. இதனால் தான் காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது பாதிக்கப்படக்கூடிய மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகிட நேர்கிறது. மலைகள் மற்றும் சமவெளி பகுதிகளில் அடிக்கடி நிகழும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்க ஈரநிலங்களைப் பாதுகாப்பதே மிகச் சிறந்த தீர்வாகும்.

”சமீபத்தில் இயற்றப்பட்ட ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகள் 2017, ஈரநிலங்களை சுற்றி நடைபெறும் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. ஈரநில மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய மேலாண்மை யுக்திகளை எப்படி பயன்படுத்தலாம் என்பதை அரசு கண்டறிய வேண்டும்” என்று இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nilgiris Environment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment