“குடிக்காதீங்க அப்பா. அப்போதான் நான் சாந்தியடைவேன்” : மாணவர் உருக்கமான கடிதம்

நெல்லையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

திருநெல்வேலியில் உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ். 12ம் வகுப்பில் படித்து வந்த தினேஷின் தந்தை சில வருடங்களாகக் கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். தந்தையின் இந்தப் பழக்கத்தால், நீண்ட நாட்களாக வீட்டில் பிரச்சனைகள் இருந்து வந்தது. இது குறித்து பல தடவை தந்தையிடம் தினேஷ் பேசியிருந்தும் அவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லை.

குடும்ப பிரச்சனையினாலும், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த தினேஷ் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது தந்தைக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில்:

“அப்பா நான் தினேஷ் எழுதுரது. நான் செத்து போனதுக்கு அப்புறமாவது நீ குடிகாம இரு. நீ குடிக்கிறதால எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்ட போடாத. ஓபன் -ஆ சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாத. மணி அப்பா தான் பண்ணனும். இது தான் என் ஆசை. அப்போதான் என் ஆத்மா சாந்தியடையும்.

குடிக்காத அப்பா இனிமேலாவது. அப்போதான் நான் சாந்தியடைவேன்.

இனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் (அ) இந்தியாவின் பிரதமர் அவர்கள் மதுபான கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளாஇ ஒழிப்பேன்.

இப்படிக்கு
தினேஷ் ”

என்று எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தில் இறந்த பிறகு குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளும் தொலைப்பேசி எண்கள் மற்றும் வீட்டு விலாசத்தையும் எழுதி வைத்திருந்தார். குடிபோதையால் கண்முன்னே அழிந்துபோன இளம் தலைமுறையின் சடலத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

×Close
×Close