திருமணமான 4 நாளில் இளைஞர் கைது : டெல்லி போலீஸ் அதிரடி

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததாக அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முஹமது முஸ்தபா என்ற இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) எடுத்துக் கொடுத்ததாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முஹமது முஸ்தபா என்ற 25 வயதுடைய இளைஞரை டெல்லி தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

முஸ்தபாவிற்கு கடந்த 8-ம் தேதி அதிராம்பட்டினத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நான்காவது நாளில் முஸ்தபா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிராம்பட்டிணம் தெக்கடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஹமது முஸ்தபா சென்னை மண்ணடி பகுதியில் வெல்கோ டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த 40 வயதான இஸ்மாயில் மொய்தீன் என்பவர் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக கடந்த ஜனவரி 1-ம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் ஷாஜகான் என்பதும், அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பதாகவும் அவருக்கு சென்னை மண்ணடியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவரும் முஸ்தபா போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

ஷாஜகான் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் தலைமையிலான டெல்லி தனிப்படை போலீசார் சில நாட்களுக்கு முஸ்தபாவை தேடி சென்னை வந்தனர். முஸ்தபாவுக்கு கடந்த 8-ம் தேதி அவரது சொந்த ஊரில் திருமணம் நடைபெற்ற தகவலை அறிந்த டெல்லி போலீசார் அதிராம்பட்டினத்துக்கு வந்து முஸ்தபாவை நேற்றிரவு கைது செய்தனர்.

டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட முஸ்தபா இன்று பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேல் விசாரணைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.

×Close
×Close