ஆகஸ்ட்டில் வருகின்றது டெஸ்லாவின் ஆட்டோபைலட் அப்டேட்

டெஸ்லா என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது அதன் ஆட்டோபைலட் எனப்படும் ஓட்டுநர் உதவி மென்பொருள் தான். ஓட்டுநரின் உதவியின்றி தானாக தனித்து வாகனங்கள் இயங்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் ஆட்டோபைலட் மென்பொருள்.

முகப்பு மற்றும் பின்பக்க கேமரா, அல்ட்ராசோனிக், ரேடார் கருவிகள் பொருத்தப்பட்ட இந்த டெஸ்லா கார்களை ஓட்டுநர் பெரிய சிரத்தை ஏதுமின்றி ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டு நிம்மதியாக பயணிக்கலாம். இந்த கார்களில் மொத்தம் எட்டு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 360 டிகிரியிலும் செயல்பாடுகளை கண்காணித்து வாகனம் ஓடத்தொடங்கும். இது நாள் வரை செமி-ஆட்டோவாக இயங்கிய டெஸ்லா தற்போது முழுவதும் ஆட்டோபைலட் மோடில் இயங்கப் போகின்றது.

புதிதாக வரும் இந்த அப்டேட் பற்றி டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலோன் மாஸ்க் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் தெரிவித்திருக்கின்றார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஆட்டோபைலட் தொடர்பாக டெஸ்லா பயனாளி கேட்ட கேள்விக்கு விளக்கமளித்திருக்கின்றார். அதில் முழுமையான ஆட்டோபைலட் மோடில் டெஸ்லாவினை இயங்க வைக்கும் மென்பொருள் V9 அப்டேட் ஆகஸ்ட் மாதம் வர இருக்கின்றது. அதில் நீங்கள் கூறும் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று கூறியிருக்கின்றார்.

இந்த செய்தி வெளிவந்த நேரத்தில் இருந்து, டெஸ்லாவின் வர்த்தக மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே டெஸ்லாவின் ஆட்டோபைலட் மோடினால் ஏகப்பட்ட விபத்துகள் நடந்திருக்கின்றது. ஆட்டோபைலட் மென்பொருளினால் எதிரில் வரும் கனரக வாகனங்களை அடையாளங்காண இயலவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பினால் தானியங்கி வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகின்றது.

×Close
×Close