கத்தியை காட்டியவரிடம் கட்டிப்பிடி வைத்தியம் (வீடியோ இணைப்பு)

கத்தியை காட்டியவரிடம் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் சமாதானம் பேசிய தாய்லாந்து நாட்டு போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் இடையே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 17-ம் தேதியன்று தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அந்நாட்டின் பாங்காக் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால், அங்கிருந்த அனிருத் மாலீ எனும் காவல் அதிகாரி, சற்றும் சலனப்படாமல், பொறுமையாக அவரிடம் பேச்சுக் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளின் படி, கத்தியை காட்டிய மர்ம நபர் முன் காவல் அதிகாரி மாலீ அமர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார். அதன் பின்னர், சமாதானமடைந்த அந்த மர்ம நபர், அதிகாரியிடம் கத்தியை ஒப்படைக்கிறார். தொடர்ந்து, அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறுகிறார் அந்த காவல் அதிகாரி.

கட்டிப்பிடி வைத்தியத்திற்கு பிறகு, காவல் அதிகாரியுடன் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து அவருக்கு அந்த மர்ம நபர் நன்றி தெரிவிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஆபத்தான நிலைமையிலும் கூட, கத்தியை காட்டியவரின் நிலைமையை புரிந்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்ட காவல் அதிகாரி மாலீ-க்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

சம்பவம் குறித்து அந்நாட்டு தொலைகாட்சி ஒன்றுக்கு காவல் அதிகாரி அளித்த பேட்டியில், கத்தியை காட்டிய அந்த நபர் ஒரு இசையமைப்பாளர். ஆனால், எதோ பிரச்னை காரணமாக பாதுகாவலராக மூன்று நாட்கள் பணிபுரிந்து வந்துள்ளார். அதற்கும் ஊதியம் தரவில்லை. இதற்கு மேலாக அவர் வைத்திருந்த கிட்டாரும் திருடு போயுள்ளது. இது அத்தனையும் சேர்த்து அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும், நான் அவரது நிலைமை புரிந்து கொண்டு அவரிடம் அனுதாபம் காட்டினேன். இருவரும் இணைந்து சாப்பிடப் போகலாம் என்று கூறினேன். இப்படியாக அவரிடம் பேச்சுக் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன் என்றார்.

கத்தியை காட்டிய மர்ம நபர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அத்துடன் அவரது மனநிலை குறித்து மதிப்பீடு செய்ய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close