சவுதியில் குட்டைப்பாவாடை அணிந்து வீடியோ: பெண் கைது

வீடியோ வெளியானது முதல், நாட்டின் விதிமுறைகளை மீறியதாக அவரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

சவுதி அரேபியாவில் பெண் ஒருவர் குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு அங்குள்ள பாலைவனம் ஒன்றில் நடமாடிய வீடியோ வைரலாக பரவிய நிலையில், அந்நாட்டின் ஆடை விதிமுறைகளை அப்பெண் கடைபிடிக்கவில்லை எனக்கூறி அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் சவுதியில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து நடைபெறுவதை சுட்டிக்காட்டுகிறது.

அந்த வீடியோவில் பெண் ஒருவர் அங்குள்ள பாலைவனம் ஒன்றில் தனியாக நடமாடுகிறார். அந்த பாலைவனத்தின் அருகாமையில் உள்ள கிராமத்தில் தான் சவுதியின் கட்டுக்கோப்பான பல்வேறு பழங்குடியின மக்கள், குடும்பங்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

சவுதியில் அந்நாட்டு பெண்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பெண்கள் உட்பட அனைவரும் ‘அபயா’ எனப்படும் மிக நீண்ட அங்கிகளையே அணிய வேண்டும். அதுமட்டுமல்லாமல், தங்களுடைய தலை மற்றும் முகத்தையும் அவர்கள் மறைக்க வேண்டும் என்பது வழக்கம்.

அதனால், அப்பெண் குட்டைப் பாவாடையுடன் நடந்த வீடியோ வெளியானது முதல், நாட்டின் விதிமுறைகளை மீறியதாக அவரை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சமீபகாலமாக சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான சில விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில், இச்சம்பவம் சவுதி இன்னும் ஒடுக்குமுறையுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. முதல்முறையாக பள்ளிகளில் பெண்கள் விளையாடவும், உடற்கல்வி சம்பந்தமான நிகழ்வுகளில் பங்கேற்கவும் அனுமதி வழங்கியது. ஆனால், இன்னும் நெருங்கிய ஆண் உறவினரின் அனுமதியின்றி கார் ஓட்டவும், பாஸ்போர்ட் வாங்கவும், வெளிநாடு செல்லவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close