”கை கழுவுவது எப்படி”: அசத்தலான துள்ளல் நடனத்துடன் செய்துகாட்டிய மருத்துவர்கள்

தற்போது, மருத்துவர்கள் சிலர் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நடனத்தை நிச்சயமாக நீங்கள் எங்கும் பார்த்திருக்க முடியாது.

மருத்துவர்களின் பணி மற்ற துறைகளை விட கடினமானதுதான். ஏனென்றால், எல்லா நாட்டிலும் நோயாளிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். எல்லா நொடிகளிலும் மருத்துவர்களுக்கான தேவையும், எதிர்பார்ப்பும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மருத்துவர் வருவதற்கு ஒரு நொடி தாமதமானாலும், உயிர் துறக்கும் மனிதர்களும் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட நெருக்கடியில் மருத்துவர்களுக்கு ஓய்வு நேரம் என்பது அரிதுதான். ஆனால், அவர்களுக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? அவர்களும் நம்மைப் போலத்தான். ஓய்வு நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து ஆடவும், பாடவும் தான் விரும்புகின்றனர்.

தற்போது, மருத்துவர்கள் சிலர் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நடனத்தை நிச்சயமாக நீங்கள் எங்கும் பார்த்திருக்க முடியாது. கொஞ்சம் சிரிக்க வைக்கும் வகையிலான நடன அசைவுகள் நெட்டிசன்களை கவர்ந்துள்ளன. உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், இந்த வீடியோவை அவர்களிடம் காண்பியுங்கள். அவர்களது அசைவுகளைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது.

இந்த வீடியோவில் துள்ளலான பாடலுக்கு நடனமாடும் மருத்துவர்கள் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டும், சன் கிளாஸ் அணிந்துகொண்டும் நடனமாடுகின்றனர். அதன்பிறகு சற்று நேரத்தில் அவற்றை களைத்து விடுகின்றனர்.

முகத்தில் சிரிப்புடன் எதிர்பார்க்காத அசைவுகளுடன் இந்த மருத்துவர்கள் நம்மை கவர்கின்றனர். இந்த நடன வீடியோ மேலோட்டமாக பார்த்தால் ஜாலிக்காக ஆடுவது போலத்தான் இருக்கும். ஆனால், உன்னிப்பாக கவனித்தால், அதில் முக்கியமான செய்தியும் இருக்கிறது. எப்படி கைகளை கழுவுவது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை குழந்தைகளுக்கு வழங்குவதுபோல் உள்ளது. அதனால் தான் இந்த வீடியோவை உங்கள் குழந்தைகளுக்கு காண்பியுங்கள் என கூறினேன். இந்த நடனத்திற்கு பெயரே ‘ஹேண்ட் வாஷ் டான்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுரை வெளியாகும் நிமிடம் வரை இந்த நடன வீடியோவை 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். நீங்களும் பாருங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close