ரயிலில் பெண்ணின் டாட்டூவை புகைப்படம் எடுத்த இளைஞர்: தக்க பதிலடி கொடுத்த பெண்

ரயிலில் பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த இளைஞருக்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து அப்பெண் தகுந்த பதிலடி அளித்தார்.

ரயிலில் பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த இளைஞருக்கு அப்பெண் தகுந்த பதிலடி அளித்தார். ஆனால், அவர் மீது புகார் அளிக்காமல் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள், என அங்கிருந்த சிலர் அப்பெண்ணுக்கு அறிவுரை கூறியது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே நாம் மீண்டும் மீண்டும் அறிவுரை கூறிக்கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்த்துவதாக இருந்தது.

கொல்கத்தாவை சேர்ந்த சதாரூபா சக்ரபர்த்தி ஹவுரா – மால்தா விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நேர்ந்த சம்பவத்தை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

அவரது முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

அப்பெண் பயணிக்கும் ரயிலில் பிண்டு மொண்டால் என்ற இளைஞன் தினந்தோறும் அதே ரயிலில் பயணிப்பார். அவர், எப்போதும் தன்னுடைய ஸ்மார்ட் ஃபோனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பார். அப்போது, அந்தப் பெண்ணின் உடனிருந்த தோழி ஒருவரை அந்த இளைஞர் வீடியோ எடுத்ததாக, அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, அந்த இளைஞரிடம் அப்பெண்கள் கேட்டபோது அதனை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பிறகு அவருடைய செல்ஃபோனில் புகைப்படங்களை பார்க்க அப்பெண்கள் பிடுங்கினர். ஆனால், செல்ஃபோனை அதற்குள் லாக் செய்துவிட்டார் அந்த இளைஞர். அதற்குப்பின் வெகுநேரம் கழித்தே தான் புகைப்படம் எடுத்ததை அந்த இளைஞர் ஒத்துக்கொண்டார்.

மேலும், அப்பெண்ணின் டாட்டூ தனக்கு பிடித்திருந்ததால் அதனை மட்டுமே தான் புகைப்படம் எடுத்ததாக கூறி சிறிதும் வருத்தமே இல்லாமல் அந்த இளைஞர் நடந்துகொண்டதாக சதாரூபா தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார். ”ஒரு பெண்ணை அவரது அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பது குற்றமில்லை, அப்படித்தானே?”, என அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, அந்த இளைஞர் மீது ரயில்வே காவல் துறையினரிடம் புகார் கொடுக்க அப்பெண்கள் முடிவெடுத்தனர். ஆனால், அங்கிருந்தவர்கள் “நீங்கள் நல்ல குடும்பத்து பெண்கள். காவல் நிலையம் சென்று உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா?”, என பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.

மேலும், அங்கிருந்த ரயில்வே அதிகாரி ஒருவர், “ஒரு பெண்ணின் டாட்டூவை புகைப்படம் எடுப்பது அவ்வளவு தவறில்லை”, என கூறியதாக அப்பெண் குறிப்பிட்டார்.

இதையடுத்து, அந்த இளைஞர் மீது ரயில்வே காவல் துறையினரிடம் அப்பெண் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: போலீஸ் அலட்சியம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

×Close
×Close