பழைய காரும் பெண்ணும் ஒன்றா? சர்ச்சையான ‘ஆடி’ கார் விளம்பரம்

மாப்பிள்ளையின் தாய் திடீரென திருமணத்தை நிறுத்தி, அந்த பெண் தன் மகனுக்கு ஏற்றவள்தானா? அவள் அழகாக இருக்கிறாளா? என்பதை சோதிக்கிறார்.

வாசனை திரவியங்கள், சாக்லேட், சமையல், வீட்டு உபயோகப் பொருட்கள் என எந்தவிதமான விளம்பரமாக இருந்தாலும், பெண்களை குறைத்து மதிப்பிட்டும், வீட்டு வேலைகள் செய்யத்தான் பெண்கள் என்பதை பறைசாற்றும் வகையிலேயே தயாரிக்கப்படுகின்றன. பெண்களுக்கு சம்பந்தமே இல்லாத பொருட்கள் குறித்த விளம்பரங்களிலும் பெண்கள் தேவைப்படுகின்றனர்.

இதுபோல், பெண்களை பயன்படுத்திய பழைய காருடன் ஒப்பிட்டு ’பிரபல’ கார் தயாரிப்பு நிறுவனம் ‘ஆடி’ வெளியிட்ட சீன விளம்பரம் பெண்களை தரக்குறைவாகவும், போகப்பொருளாகவும் சித்தரித்து காட்டப்பட்டுள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விளம்பரத்தில், சீன பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில், மாப்பிள்ளையின் தாய் திடீரென திருமணத்தை நிறுத்தி, அந்த பெண் தன் மகனுக்கு ஏற்றவள்தானா? அவள் அழகாக இருக்கிறாளா? என்பதை சோதிக்கிறார். அதுவும், அங்குள்ளவர்கள் திகைக்கும் வகையில், பெண்ணின் மூக்கு, வாய், காது என எல்லாவற்றையும் இழுத்து, உற்றுநோக்கி சோதிக்கிறார். அதன்பின், மேடையிலிருந்து இறங்கி பாதி தூரம் சென்றபின், “மணமகள் சூப்பர்” என்பதைப் போல் சைகை செய்கிறார். எல்லாரும் நிம்மதியடைகின்றனர். திடீரென மணமகளின் மார்பகங்களை நோக்குகிறார் மாப்பிள்ளையின் தாய். எங்கே மார்பகங்களை சோதித்துப் பார்ப்பாரோ என அனைவரும் அச்சமடைகின்றனர்.

அங்கிருந்துதான் கார் விளம்பரம் துவங்குகிறது. அதாவது, பயன்படுத்திய பழைய கார்களை வாங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும் என திரையின் கீழே விளக்கம் அளிக்கப்படுகிறது. சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் செயல்பட்டு வரும் ஆகில்வி அண்ட் மேதர் நிறுவனம் பழைய கார்களை சோதித்து சான்றிதழ் அளிப்பதாகவும், அதனால், தங்களிடம் மறுவிற்பனை கார்களை நம்பி வாங்கலாம் எனும் நோக்கில் ’ஆடி’ கார் நிறுவனம் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

ஆனால், ஒரு பெண்ணை பயன்படுத்திய, பழைய கார்களுடன் விற்பனைப் பொருளாக ஒப்பிட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் அழகாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இருப்பது திருமணத்திற்கு கட்டாயமான தகுதியாக உள்ளது எனவும் அந்த விளம்பரத்தில் கூறியிருப்பது அருவருக்கத்தக்கதாக உள்ளது என கடுமையான கண்டனங்களை சீன மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு நடந்த பின்பு, ஆடி நிறுவனம் இந்த விளம்பரத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close