முதலையிடம் கையை பறிகொடுத்த இளம் தலைமை நிர்வாக அதிகாரியின் மீது தடை செய்யப்பட்ட பகுதியினுள் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த தகவல் தொழிநுட்ப நிறுவனமான "டர்டில் ஷெல் டெக்னாலாஜிஸ்" எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் முடித் தன்ட்வடே (26).ஐஐடி-யில் பட்டம் பெற்றவரான இவர், பெங்களூருவின் பன்னாராஹட்டா வனப்பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதியான தட்டேகேரே ஏரிப் பகுதிக்கு, தான் வளர்க்கும் இரு நாய்களை குளிப்பாட்டுவதற்காக சென்றுள்ளார்.
அச்சமயத்தில், சற்றும் எதிர்பாரா விதமாக ஏரிக்குள் இருந்து வந்த முதலை ஒன்று முடித் தன்ட்வடேவின் இடது கையை கவ்வியுள்ளது. இதில், அவரது இடது கை முட்டிப் பகுதிக்கு கீழ் உள்ள பகுதி முதலையின் பிடியில் சென்று விட, அங்கேயே ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து அவர் சரிந்து விழுந்துள்ளார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், "முதலை தான் கடித்த பகுதியை தின்றிருக்கும். எனவே, அதனை மீட்டு மீண்டும் பொருத்துவது சாத்தியமற்ற செயல். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே எதையும் உறுதியாக கூற முடியும்” என்றார்.
இச்சம்பவம் குறித்து ராமநகரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறும்போது, முடித் தன்ட்வடே எவ்வித புகாரும் அளிக்கவில்லை. எனவே, காவல்துறை தாங்களாகவே முன்வந்து தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.